தர்மபுரி குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


தர்மபுரி குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 20 April 2017 4:00 AM IST (Updated: 20 April 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அரூர்,

அரூர் அருகே உள்ள குமாரம்பட்டி ஊராட்சி மாம்பட்டியில் 700–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அந்த பகுதியில் உள்ள அரூர்–ஊத்தங்கரை சாலையில் திரண்டனர்.

பின்னர் குடிநீர் வழங்கக்கோரி, காலிக்குடங்களை சாலையில் வரிசையாக வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரூர்–ஊத்தங்கரை சாலையில் சுமார் 1 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த அரூர் தாசில்தார் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

குடிநீர் வினியோகம்

அப்போது மாம்பட்டி பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள 4 ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தினார்கள்.

கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.


Next Story