சேந்தமங்கலம் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் விடிய, விடிய போராட்டம்


சேந்தமங்கலம் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் விடிய, விடிய போராட்டம்
x
தினத்தந்தி 20 April 2017 3:29 AM IST (Updated: 20 April 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் விடிய, விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள ராசிபுரம் சாலையில் 2 மதுக்கடைகள் இயங்கி வந்தன. இந்த கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 1–ந் தேதி மூடப்பட்டது. இதை தொடர்ந்து மூடப்பட்ட கடைகளை சேந்தமங்கலம் அருகே உள்ள ஜங்களாபுரம் பகுதியில் அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் ஜங்களாபுரம் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த 15 நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விடிய, விடிய போராட்டம்

நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:– ஜங்களாபுரம் பகுதியில் 400–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தற்போது புதியதாக மதுக்கடை அமைய உள்ள பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் கழிப்பிடம், பஸ்நிறுத்தம் போன்றவை இருப்பதால் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் இங்கு மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தோம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தொடர்ந்து இரவு மற்றும் பகல் நேரங்களில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story