தமிழகத்தில் பின்வாசல் வழியாக காலூன்ற பா.ஜனதா முயற்சி


தமிழகத்தில் பின்வாசல் வழியாக காலூன்ற பா.ஜனதா முயற்சி
x
தினத்தந்தி 23 April 2017 5:15 AM IST (Updated: 23 April 2017 1:14 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பின்வாசல் வழியாக காலூன்ற பா.ஜனதா முயற்சி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி

திண்டுக்கல்,

தமிழகத்தில் பின்வாசல் வழியாக காலூன்ற பா.ஜனதா முயற்சி செய்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பின்வாசல் வழியாக...

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. தற்போது மீண்டும் இணைப்பதற்கு முயற்சி நடக்கிறது. இது நரேந்திரமோடியின் சித்து விளையாட்டே ஆகும். தமிழகத்தில் பொம்மலாட்டம் நடக்கிறது. அமைச்சர்கள் பொம்மைகளாகவும், அவர்களை இயக்கும் நூலாக நரேந்திரமோடியும், அமித்ஷாவும் உள்ளனர்.

தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு இடமில்லை. ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தலுக்கு யாரும் கூட்டணி சேரமாட்டார்கள். எனவே, பல்வேறு சதிவலையை பின்னுகிறது. பின்வாசல் வழியாக தமிழகத்தில் காலூன்ற பா.ஜனதா முயற்சிக்கிறது. அரசு எந்திரங்களை தவறாக பயன்படுத்தி அச்சுறுத்தியும், ஆசை காண்பித்தும் வசப்படுத்த முயற்சிக்கிறது. அந்த முயற்சி ஒரு போதும் பலிக்காது.

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க விசாரணை நடத்த வேண்டும் என்பதை வரவேற்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்கிறார். அந்த விசாரணை முறையாக இருக்க வேண்டும். முதல்–அமைச்சர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், எய்ம்ஸ் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அமைச்சர், ஏன் பிரதமரிடமும்கூட விசாரணை நடத்த வேண்டும்.

ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது, பிரதமர் ஏன் வரவில்லை. ஜெயலலிதா வீட்டில் விருந்து சாப்பிட்டவர் நரேந்திரமோடி. பெரிய தலைவரான ஜெயலலிதாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வெளிநாடுகளுக்கு அழைத்து செல்ல முயற்சி செய்யவில்லை. அதில் என்ன பின்னணி என்பது தெரியவேண்டும். எனவே, பிரதமரிடமும் விசாரணை நடத்த வேண்டும்.

கோமாவில் தமிழகம்

தமிழகத்தில் கடுமையான வறட்சி, குடிநீர் பஞ்சம், மதுக்கடை மற்றும் குடிநீருக்காக போராட்டங்கள் நடக்கின்றன. தமிழ்நாட்டுக்கு ரூ.88 ஆயிரம் கோடி நிதி கேட்டும், ரூ.4 ஆயிரம் கோடியைத் தான் மத்திய அரசு ஒதுக்கியது. டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை, பிரதமர் இதுவரை சந்திக்கவில்லை. மத்திய அரசு, தமிழ்நாட்டை புறக்கணித்து வருகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்ததில் இருந்து தமிழ்நாடு அரசு கோமாவில் தான் இருக்கிறது. அமைச்சர்கள், பதவிக்காக சண்டை போடுகின்றனர். அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நீடிக்குமா? என நான் ஜோதிடம் கூற முடியாது. இன்னும் 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நடைபெறுவது கடினமே.

உள்கட்சி பிரச்சினை

முதல்–அமைச்சராக யார் வரவேண்டும், யார் கட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என்பது உள்கட்சி பிரச்சினை. அதில் தலையிட விரும்பவில்லை. அ.தி.மு.க. இரண்டாக உடையும், இரட்டை இலை முடக்கப்படும் என பா.ஜனதா தலைவர்கள் கூறினர். அனைத்தும் அப்படியே நடந்தது. எனவே, பா.ஜனதா பின்னால் இருந்து செயல்படுகிறது. மேலும் அவர்கள் நல்ல ஜோதிடர்கள் போன்று தெரிகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திராகாந்தி நூற்றாண்டு விழா

முன்னதாக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி நூற்றாண்டு விழா, உலக மகளிர் தினவிழா திண்டுக்கல்லில் நடந்தது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசியதாவது:–

இந்தியாவில் நீண்டகாலம் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தினார். பாகிஸ்தானிடம் இருந்து வங்காளதேசத்தை பிரித்து தனி நாடு உருவாக்கினார். இதனால் அவரை பராசக்தி என வாஜ்பாய் கூறினார். தமிழகத்தில் அமைச்சர்கள் குடுமிபிடி சண்டை போடுவதற்கு, பா.ஜனதாவே காரணம். அ.தி.மு.க.வை தேர்தல் கூட்டணிக்காக உடைத்தனர். இப்போது அச்சுறுத்தி இணைக்க முயற்சி நடக்கிறது. தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீண்டும் வலிமை அடைந்து, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிடாத இடங்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு பதவிகளுக்கு கட்சி சின்னம் கிடையாது என்பதால், அவற்றில் பெண்கள் அதிகமாக போட்டியிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

குமரிஅனந்தன்

விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் பேசுகையில், இந்திராகாந்தி நாட்டின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்து பணியாற்றினார். அவருடைய சாதனைகளை பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். இந்திய சுதந்திர போராட்டத்தில் நிறைய பெண்கள் பங்களிப்பு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் மகிளா காங்கிரசார் ஈடுபட வேண்டும். உதாரணமாக பக்கத்து வீட்டு பெண்களுக்கு தோட்டம் அமைப்பதற்கு கூட காய்கறி விதைகளை கொடுக்கலாம். அந்த செடிகளை பார்க்கும் போதெல்லாம் உங்கள் மீதும், காங்கிரஸ் மீதும் நல்ல நம்பிக்கை ஏற்படும், என்றார்.

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி ஷோபா ஓசா பேசுகையில், தமிழகத்தில் 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு நாம் மக்களை சந்தித்து வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை விளக்க வேண்டும். 2019–ம் ஆண்டில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று, ராகுல்காந்தி பிரதமர் ஆவார், என்றார்.

நக்மா–குஷ்பு

மேலும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுசெயலாளர் நக்மா, செய்தி தொடர்பாளர் குஷ்பு, மாநில தலைவி ஜான்சிராணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர். இதில் மாநில பொதுச்செயலாளர் கோவை கவிதா உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story