ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்


ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 23 April 2017 4:30 AM IST (Updated: 23 April 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட ஆயுள் தண்டனை கைதி போலீஸ் பாதுகாப்பை மீறி தப்பி ஓடிவிட்டார்.

செங்குன்றம்,

சென்னை திருவொற்றியூர், சாத்துமா நகரை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன். இவர் அதே பகுதியை சேர்ந்த பேபியம்மாள் (வயது 70) என்பவர் நடத்தி வந்த தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். 2010–ம் ஆண்டு சம்பள பிரச்சினை காரணமாக பேபியம்மாளுக்கும், கோட்டீஸ்வரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த விரோதத்தில் திருவொற்றியூர் காந்திநகர் அருகே கோட்டீஸ்வரன் பேபியம்மாளை கொலை செய்தார். திருவொற்றியூர் போலீசார் கோட்டீஸ்வரனை கைது செய்தனர். பொன்னேரி கோர்ட்டில் நடந்து வந்த இந்த கொலை வழக்கில் 2012–ம் ஆண்டு கோட்டீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதில் இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஸ்டான்லி ஆஸ்பத்திரி

சிறையில் கோட்டீஸ்வரன் பார்வை குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதேபோல வேறு சில கைதிகளும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று காலை 10 மணி அளவில் கோட்டீஸ்வரன் உள்பட 10 கைதிகளை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தனி வேனில் ஜெயில் சப்–இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் 5 பெண் போலீசார், 7 ஆண் போலீசார் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கைதிகள் 10 பேரும் தனித்தனியே சோதனைக்காக வரிசையில் நிற்கவைக்கப்பட்டனர். போலீசாரும் பாதுகாப்புக்கு அருகிலேயே இருந்தனர்.

தப்பி ஓட்டம்

கண் பரிசோதனை அறைக்கான வரிசையில் நின்றுகொண்டிருந்த கோட்டீஸ்வரன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். உடனே போலீசார் கோட்டீஸ்வரனை ஸ்டான்லி ஆஸ்பத்திரி முழுவதும் தீவிரமாக தேடினர். ஆனால் அவர் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடியது குறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிறைத்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆஸ்பத்திரியில் கைதி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story