கொடைக்கானல்–பழனி மலைச்சாலையில் 15 அடி பள்ளத்தில் சுற்றுலா பஸ் பாய்ந்தது: 9 பேர் காயம்
கொடைக்கானல்–பழனி மலைச்சாலையில் விபத்து: 15 அடி பள்ளத்தில் சுற்றுலா பஸ் பாய்ந்தது நெய்வேலியை சேர்ந்த 9 பேர் காயம்
பழனி
கொடைக்கானல்–பழனி மலைச்சாலையில் விபத்துக்குள்ளான சுற்றுலா பஸ் 15 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:–
கொடைக்கானலுக்கு சுற்றுலாகடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரகுப்பத்தை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 80). இவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோடை விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு கொடைக்கானலுக்கு ஒரு மினி பஸ்சில் புறப்பட்டனர்.
அந்த பஸ்சை நெய்வேலி வடக்குவெல்லூர் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் (34) என்பவர் ஓட்டினார். குழந்தைகள் உள்பட மொத்தம் 23 பேர் பஸ்சில் பயணம் செய்தனர். அவர்கள் நேற்று அதிகாலை கொடைக்கானலை சென்றடைந்தனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு, நேற்று மாலை 3 மணி அளவில் பழனிக்கு புறப்பட்டனர்.
பள்ளத்தில் பாய்ந்ததுமலைச்சாலை வழியாக பழனியை நோக்கி பஸ் வந்துகொண்டிருந்தது. சவரிக்காடு அருகே 11–வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் திரும்பும்போது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பிறகு, வளைவு பகுதியில் இருந்த தடுப்புச்சுவர் மீது பலமாக மோதியது. இதில் தடுப்புச்சுவர் உடைந்து, சுமார் 15 அடி பள்ளத்தில் பஸ் தலைகீழாக பாய்ந்தது.
பிறகு, பஸ்சின் முன்பகுதி தரையில் பட்டு, அப்படியே தலைகீழாக நின்றது. பஸ்சில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அபயக்குரல் எழுப்பினர். அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் பஸ் விபத்துக்குள்ளானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
9 பேர் காயம்அதே வேளையில் உடனடியாக மீட்பு பணியிலும் களம் இறங்கினர். அவர்கள் பள்ளத்தில் இறங்கி பஸ்சின் கண்ணாடியை உடைத்தனர். பிறகு, இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். மலைப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் என்பதால், தாங்கள் வந்த வாகனங்களில் காயமடைந்தவர்களை ஏற்றி சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்தில் ராமானுஜம், அவருடைய சம்பந்தி ராமலிங்கம் (62), பாப்பம்மாள் (58) மற்றும் உறவினர்கள் சிவகாமசுந்தரி (60), பாஸ்கரன் (50), ராஜேஸ்வரி (35), பானுமதி (37), ஜோதி (55), டிரைவர் சம்பத்குமார் ஆகிய 9 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் பாஸ்கரன் அரசு போக்குவரத்து துறையில் டிரைவராக இருக்கிறார்.
மற்ற அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மரங்கள் இருந்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
கொடைக்கானல்–பழனி ரோட்டில் விபத்துக்குள்ளான பஸ் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 15 அடி பள்ளத்தில் பாய்ந்தது. பஸ் பாய்ந்த பகுதியை அடுத்து சரிவாக பள்ளம் தொடர்கிறது. ஆனால், அங்கு பெரிய மரங்கள் வளர்ந்து உள்ளன. அந்த மரங்களில் பஸ் சிக்கிக்கொண்டது. ஒரு வேளை அங்கு மரங்கள் இல்லை என்றால், பஸ் மலைச்சரிவில் உருண்டு மிகப்பெரிய விபத்து நேர்ந்து இருக்கும். இது உயிர் பலியையும் ஏற்படுத்தி இருக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், விபத்து நடந்த இடத்தில் வளர்ந்திருந்த மரங்கள் அனைவரின் உயிரையும் காப்பாற்றியது.