குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 April 2017 4:30 AM IST (Updated: 25 April 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

தஞ்சாவூர்,

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததின் காரணமாக வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. குடிநீர் பற்றாகுறையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் வழங்கக்கோரி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி கிராமத்தில் உள்ள அம்பலார் தெரு, நாயக்கர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப்பகுதி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நேற்று காலை தஞ்சை-வல்லம் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த தஞ்சை தாசில்தார் குருமூர்த்தி, வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தங்கள் பகுதிகளில் கடந்த பல மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும், குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்குழாய் கிணறு அமைக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

இந்த பேச்சுவார்த்தையில், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சாலை மறியலால் தஞ்சை-வல்லம் சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதித்தது.


Next Story