பாராளுமன்ற நிலைக்குழு ராமேசுவரம் வருகை
பொது வினியோக திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்ற நிலைக்குழுவினர் நேற்று ராமேசுவரம் வந்தனர்.
ராமேசுவரம்,
பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் திவாகர் ரெட்டி தலைமையில் பாரதி மோகன், ரவிந்தர், குசபகா, தர்மேந்திரகுமார், ராமச்சந்திர பஸ்வான், சுனில்குமார் மண்டல், பிரேம்பிரகாஷ் உள்பட 21 பாராளுமன்ற உறுப்பினர்கள், 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட பாராளுமன்ற நிலைக்குழுவினர் நேற்று மதியம் ராமேசுவரம் வந்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றனர். அவர்களை கோவில் இணைய ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், தாசில்தார் கணேசன், சூப்பிரண்டுகள் ககாரின் ராஜ், பாலசுப்பிரமணியன், பேஸ்கார் அண்ணாத்துரை, நேர்முக உதவியாளர் கமலநாதன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். பின்பு அவர்கள் சாமி–அம்பாளை தரிசனம் செய்துவிட்டு உலக பிரசித்தி பெற்ற 3–ம் பிரகாரத்தை பார்வையிட்டனர்.
போதுமான இருப்பு உள்ளதுஅதைத்தொடர்ந்து பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் திவாகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:– இந்த நிலைக்குழு பொது வினியோக திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய பகுதிகளில் மத்திய அரசு சார்பில் பொது வினியோக உணவு பொருட்கள் தேவை மற்றும் இருப்பு, முறையாக அரிசி, மண்எண்ணை உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக வந்துள்ளோம்.
திருவனந்தபுரம் சென்று ஆய்வு மேற்கொண்ட பின்னர் ராமேசுவரம் வந்துள்ளோம். இங்கிருந்து மதுரை சென்று நாளை (இன்று) அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளோம். பின்பு அங்கிருந்து திருப்பதி சென்றுவிட்டு ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து பாரதிமோகன் எம்.பி. கூறியதாவது:– தமிழ்நாட்டில் பொது வினியோக பொருட்கள் போதுமான அளவில் கையிருப்பு உள்ளது. மேலும் தேவை இருப்பின் அதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ராமேசுவரம் வந்த எம்.பி.க்களை பா.ஜ.க. நகர் தலைவர் ஸ்ரீதர், பொது செயலாளர் நம்புராஜன் ஆகியோர் வரவேற்றனர்.