விவசாயிகளுக்கு ஆதரவாக முழுஅடைப்பு போராட்டம் மறியலில் ஈடுபட்ட 1,124 பேர் கைது


விவசாயிகளுக்கு ஆதரவாக முழுஅடைப்பு போராட்டம் மறியலில் ஈடுபட்ட 1,124 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2017 4:30 AM IST (Updated: 26 April 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு ஆதரவாக அரியலூர் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர் 1,124 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க. தலைமையில் அனைத்து கட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

அரியலூர் மாவட்டத்திலும் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. அரியலூரில் காந்தி மார்க்கெட், பெரிய கடைவீதி, செந்துறை சாலை, ஜெயங்கொண்டம் சாலை, வெள்ளாள தெரு உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஓட்டல்கள், வர்த்தக நிறு வனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் நகரம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகள், ஒரு சில பெட்டிக்கடைகள் திறந்து இருந்தன. அரியலூர் பஸ்நிலையத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயங்கின. இதனால் பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. மாவட்டத்தில் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், ஷேர்ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயங்கவில்லை. இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.

அரியலூரில்...

அரியலூரில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் காங் கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் நகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அரியலூர் பஸ்நிலையம் அருகே வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 256 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். அரியலூர் அண்ணா சிலை அருகே விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பஸ் மறியலுக்கு முயன்ற 102 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

திருமானூர் ஒன்றியத்தில் திருமானூர், கீழகாவட்டாங்குறிச்சி, கீழப்பழுவூர், ஏலாக் குறிச்சி, திருமழபாடி உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருமானூரில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் திருமானூர் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் கென்னடி தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 97 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

கீழப்பழுவூர்-ஜெயங்கொண்டம்

கீழப்பழுவூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அசோக சக்ரவர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட இளை ஞரணி முத்தையா, பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 55 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். ஜெயங்கொண்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் பல்வேறு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 75 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மீன்சுருட்டியில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அங்கு தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், வடக்கு ஒன்றிய செயலாளர் தனசேகர் ஆகியோர் தலைமையில் அனைத்துக்கட்சி யினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கதிர்வளவன், ஒன்றிய பொறுப்பாளர்கள் பாரதி, காமராஜ் உள்பட 112 பேரை மீன்சுருட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தா.பழூர்-வி.கைகாட்டி

தா.பழூரில் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 125 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

வி.கைகாட்டியில் கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் வி.கைகாட்டி ஜங்சன் பகுதி ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சொடி காணப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த மறியல் போராட்டத்தில் மொத்தம் 1,124 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story