ஈரோடு மாவட்டத்தில் ஓட்டல்களில் இயங்கி வந்த 20 மதுபான பார்களுக்கு ‘சீல்’ கலெக்டர் நடவடிக்கை


ஈரோடு மாவட்டத்தில் ஓட்டல்களில் இயங்கி வந்த 20 மதுபான பார்களுக்கு ‘சீல்’ கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 April 2017 4:30 AM IST (Updated: 26 April 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் ஓட்டல்களில் இயங்கி வந்த 20 மதுபான பார்களுக்கு ‘சீல்’ வைத்து கலெக்டர் எஸ்.பிரபாகர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரபல ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் என 23 இடங்களில் எப்.எல்.2, எப்.எல்.3 உள்ளிட்ட உரிமங்கள் பெற்று மதுபான பார்கள் இயங்கி வந்தன. இந்த பார்களில் குளிர்சாதன வசதியுடன் மதுப்பிரியர்கள் விரும்பும் வகையில் மது விற்பனை செய்தும், அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை விற்பனை செய்தும் வந்தனர். டாஸ்மாக் செல்ல விரும்பாத பலரும் இந்த ஓட்டல்களில் செயல்பட்டு வந்த மதுபான பார்களுக்கு செல்வதை கவுரவமாக கருதி சென்று வந்தனர்.

இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 220 மீட்டர் மற்றும் 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபான பார்களை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துணை ஆணையாளர், ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார்.

அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுதலின் படி மதுக்கடைகள்(டாஸ்மாக்) மற்றும் பார்கள் அகற்றப்பட்டன.

மேலும் ஓட்டல்கள், விடுதிகளில் உரிமம் பெற்று இயங்கி வந்த மதுபான பார்களை ஆய்வு செய்ய தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் குழுவை கலெக்டர் எஸ்.பிரபாகர் நியமித்தார். இந்த குழுவினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். உரிமம் பெற்ற பார்களாக இருந்தாலும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் விதிகளுக்கு முரணாக இருந்தால் அந்த பார்களுக்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று ஈரோட்டில் உள்ள லீ–ஜார்டின் ஓட்டல், பாலாஜி கிளாசிக், கோல்டன் டவர் ஓட்டல், ஐஸ்வர்யா ஓட்டல் மற்றும் கோபியில் உள்ள எஸ்.கே.எஸ்.ரெசிடென்சி ஆகிய 5 ஓட்டல்களில் இயங்கி வந்த மதுபான பார்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

மூடப்பட்டன

இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 15 ஓட்டல்களில் செயல்பட்டு வந்த மதுபான பார்கள் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன. தற்போது 5 பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் ஓட்டல் மற்றும் விடுதிகளில் இயங்கி வந்த மொத்தம் 20 மதுபான பார்கள் ‘சீல்’ வைத்து மூடப்பட்டு உள்ளன. தற்போது ஈரோட்டில் 2 உரிமம் பெற்ற மதுபார்களும், கோபியில் ஒரு பாரும் மட்டுமே இயங்கி வருகின்றன என்றனர்.

இதுபோல் ‘சீல்’ செய்யப்பட்ட பார்களில் இருந்த மதுபானங்களும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு விற்கவோ, பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story