சேலம் மாவட்டத்தில் பிரசவ காலங்களில் ஏற்படும் உயிரிழப்பு குறைந்திருக்கிறது கருத்தரங்கில் டாக்டர்கள் தகவல்
சேலம் மாவட்டத்தில் பிரசவ காலங்களில் ஏற்படும் உயிரிழப்பு குறைந்திருக்கிறது என்று சேலம்
சேலம்,
சேலம் மாவட்டத்தில் பிரசவ காலத்தில் கர்ப்பிணிகளின் இறப்பு விகிதத்தை குறைப்பது தொடர்பான கருத்தரங்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது. இதில் அரசு ஆஸ்பத்திரி டீன் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மகப்பேறு துறையை சேர்ந்த உதவி பேராசிரியை ஜெயமணி வரவேற்றார். அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு ராஜசேகர், அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் வித்யாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சேலம், கோவை, திருச்சி, சென்னையை சேர்ந்த அரசு மருத்துவக்கல்லூரிகளில் இருந்து டாக்டர்கள் பலர் கலந்து கொண்டு பிரசவ காலத்தில் கர்ப்பிணிகளின் இறப்பு விகிதத்தை குறைப்பது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளித்து பேசினர்.
அப்போது, சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிரசவ காலங்களில் ஏற்படும் உயிரிழப்பு குறைந்திருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த கருத்தரங்கு குறித்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி பேராசிரியை டாக்டர் சுபா கூறியதாவது:–
சத்து குறைபாடுகர்ப்பிணிகளுக்கு சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, ரத்த சோகை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சரியான முறையில் டாக்டர்களை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தற்போது பெண் குழந்தைகளுக்கு சத்து குறைபாடு உள்ளது. இதனால் பெண் குழந்தைகள் சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு ரத்த கொதிப்பு இருந்தால் வலிப்பு ஏற்படும். கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பெண்கள் அடிக்கடி டாக்டர்களின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும். பிரசவ காலங்களில் கர்ப்பிணிகளின் இறப்பு 1 சதவீதம் கூட இருக்கக்கூடாது என்பது தான் அரசின் நோக்கம்.
கவனமாக இருக்க வேண்டும்சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாதம் 800 முதல் 850 பிரசவங்கள் நடைபெறுகிறது. பெண்களுக்கு பிரசவம் நடைபெறும்போது, ரத்த கொதிப்பு மூலம் ஏற்படும் வலிப்பு நோய், ரத்தப்போக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது. அதை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் சுபா கூறினார்.