அனந்தன்குளத்தை சுற்றுலாத்தலமாக மாற்றி படகு சவாரி விடப்படும் அமைச்சர் பேட்டி
நாகர்கோவில் அனந்தன்குளத்தை சுற்றுலாத்தலமாக மாற்றி படகு சவாரி விடப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
நாகர்கோவில்,
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவில் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள அனந்தன்குளத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவது தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:–
சுற்றுலாத்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் இன்னும் என்னென்ன வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் அனந்தன்குளம் அமைந்திருக்கிறது. 30 ஏக்கர் பரப்பளவில் அற்புதமான இடமாக இது காட்சியளிக்கின்றது. மழை பெய்து இயற்கையாகவே வரும் நீரை தேக்கி வைத்தாலே 10 அல்லது 11 மாதங்களுக்கு குளத்தில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். வன பகுதி சூழ்ந்த இடமாகவும் இருக்கிறது. அனந்தன்குளத்தில் படகு சவாரியை தொடங்கி சுற்றுலாத்தலமாக மாற்ற விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
மருத்துவ துறையில் அற்புதமான சேவைஇந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் விட தமிழகத்துக்குத்தான் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். மருத்துவ துறையிலும் தமிழகம் அற்புதமான சேவையை கொடுக்கிறது. வெளி நாடுகளில் இருந்து சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருபவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தமிழகத்துக்கு வருகிறார்கள்.
சுற்றுலாத்துறைக்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. சுவதேஷ்தர்சன் நிதியில் இருந்து ஆண்டுக்கு ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை வழங்கப்படுகிறது. இது கடலோர சுற்றுலா வளர்ச்சிக்கு செலவிடப்படும். பிரசாத் நிதியில் இருந்து 2 மாவட்டங்களை தத்து எடுக்க வேண்டும். ஒரு மாவட்டத்துக்கு ரூ.25 கோடி கொடுக்கப்படும். இந்த நிதியில் கடந்த ஆண்டு காஞ்சீபுரம் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய ஊர்கள் தத்து எடுக்கப்பட்டது.
விமான நிலையம்குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வறிக்கை முதல்–அமைச்சரிடம் கொடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் கலர் கலராக உடை அணிந்து ஊர் ஊராக சுற்றுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி. உள்பட பலர் உடனிருந்தனர்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.