கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது


கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 12 May 2017 4:15 AM IST (Updated: 11 May 2017 11:21 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை வாரம்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு, 300 வளர்ப்பு கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவைகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது. இதை பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் பிடித்துச்சென்றனர்.

நேற்று வழக்கமான சந்தை கூடியது. இதற்கு சேலம், கோவை, கரூர், நாமக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிக மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

ரூ.34 ஆயிரத்துக்கு விற்பனை


பசுமாடுகள் 350, எருமை மாடுகள் 300 என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.18 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.34 ஆயிரத்துக்கும் விற்பனையானது. பசுமாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.16 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.32 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

 சென்னை, திருவண்ணாமலை, ஆத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், மராட்டியம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை பிடித்து வேன் மற்றும் லாரிகளில் ஏற்றிச்சென்றனர்.

மாடுகள் வரத்து குறைவு


இதுகுறித்து சந்தை மேலாளர் முருகன் கூறும்போது, ‘தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் மாடுகளுக்கு தேவையான பசுந்தீவனம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வரவில்லை.

இதன் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக 1,000–த்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் இன்று (நேற்று) 650 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் 90 சதவீத மாடுகள் விற்பனையானது.’ என்றார்.


Related Tags :
Next Story