தூத்துக்குடியில் கடல் சீற்றம் கடல்நீர் ரோட்டை மூழ்கடித்தது
தூத்துக்குடியில் நேற்று கடல் சீற்றம் காணப்பட்டது. இதன் காரணமாக கடல்நீர் ரோட்டை மூழ்கடித்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நேற்று கடல் சீற்றம் காணப்பட்டது. இதன் காரணமாக கடல்நீர் ரோட்டை மூழ்கடித்தது.
கடல் சீற்றம்தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான கடற்கரை கிராமங்கள் அமைந்து உள்ளன. அமாவாசை, பவுர்ணமியையொட்டி கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும். அப்போது கடல்நீர் மட்டம் அதிகரிக்கும் போது தாழ்வான பகுதிகளில் கடல்நீர் கரையை தாண்டி வெளியில் வருவது வழக்கம். ஆனால் சமீபகாலமாக தூத்துக்குடி தாளமுத்துநகர், ராஜபாளையம், சிலுவைப்பட்டி கடற்கரை பகுதியில் வழக்கத்தைவிட அதிக அளவில் கடல் சீற்றம் காணப்படுகிறது.
ரோட்டை மூழ்கடித்ததுஇந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் தூத்துக்குடி தாளமுத்துநகர், ராஜபாளையம், சிலுவைப்பட்டி கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக அதிக அளவில் அலைகள் எழும்பின. இதனால் கடல்நீர் கரையை கடந்து வெளியேறியது. அந்த பகுதியில் உள்ள ரோட்டை மூழ்கடித்தபடி மறுபக்கத்தில் உள்ள கருவாடு உற்பத்தி செய்யும் இடத்துக்குள் தண்ணீர் புகுந்து தேங்கியது.
மேலும் அந்த பகுதியில் உள்ள மீன் ஏலக்கூடம் மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தையும் கடல் நீர் சூழ்ந்தது. அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் தண்ணீரில் பாதியளவு மூழ்கிய நிலையில் இருந்தன. கடற்கரையோரத்தில் சில கடல் அட்டைகளும் இறந்து கரை ஒதுங்கி கிடந்தன. இதேபோன்று கடந்த மார்ச் மாதமும் கடல் நீர் கரையை கடந்தது. தொடர்ச்சியாக கடல்நீர் கரையை கடந்து வருவதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தூண்டில் வளைவுஇதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும் போது, அமாவாசை, பவுர்ணமியையொட்டி கடலில் சீற்றம் ஏற்பட்டு, நீர்மட்டம் அதிகரிக்கும். அப்போது கடல்நீர் சிறிதளவு கரையை தாண்டி வரும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் தண்ணீர் வருகிறது. திரேஸ்புரம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டதால், கடல்நீர் ராஜபாளையம், சிலுவைப்பட்டி பகுதியில் கரையை கடந்து வருகிறது. ஆகையால் ராஜபாளையம் பகுதியிலும் தூண்டில் வளைவு அமைத்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.