கொடைக்கானலில் வசிக்க விரும்பும் மணிப்பூர் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா ஜூலை மாதம் காதலனை திருமணம் செய்கிறார்


கொடைக்கானலில் வசிக்க விரும்பும் மணிப்பூர் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா ஜூலை மாதம் காதலனை திருமணம் செய்கிறார்
x
தினத்தந்தி 12 May 2017 4:30 AM IST (Updated: 12 May 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா தனது காதலனை அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், அவர் கொடைக்கானல் வந்திருந்தார்.

கொடைக்கானல்

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா. அந்த மாநிலத்தில் அமலில் இருக்கும் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தினை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அதற்காக 16 ஆண்டுகளாக இவர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அத்தனை ஆண்டுகள் போராட்டம் நடத்தியும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இறுதியில் அவரே தானாக போராட்டத்தை கைவிட்டார்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அதில் அவருக்கு 90 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. இதனால் பெரும் விரக்தி அடைந்த அவர், அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்தார். எனினும் தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபடப்போவதாகவும் கூறினார்.

காதலனுடன் தங்கினார்

அதோடு தான் காதலித்து வரும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டெஸ்மான்ட் என்பவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அவர் தெரிவித்தார். அவரது திருமணம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலை கிராமத்தில் ஜூலை மாதம் நடைபெறும் எனவும் தெரிவித்து இருந்தார்.

அதன்படி கடந்த மாதம் கொடைக்கானல் பெருமாள்மலை கிராமத்துக்கு இரோம் ஷர்மிளா, காதலனுடன் வந்துள்ளார். அங்கு ஒரு சாதாரண வீட்டில் 2 பேரும் தங்கி இருந்துள்ளனர். எனினும், தாங்கள் யார்? என்று யாரிடமும் சொல்லாமல் தங்கி உள்ளனர். அப்போது பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துள்ளனர். மேலும் உப்புப்பாறை மெத்து பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஆசிரமத்துக்கு இரோம் ஷர்மிளா சென்றுள்ளார். அங்கு அவர் பல நாட்கள் தியான பயிற்சியை மேற்கொண்டு உள்ளார்.

திருமணம்

அப்போது மணிப்பூரில் உள்ள அவருடைய நண்பர்களிடம் பேசிய அவர், கொடைக்கானல் மலைப் பகுதி மிகவும் அமைதியாக உள்ளது. மற்ற மலை வாசஸ்தலங்களை விட நல்ல பருவநிலை நிலவுவதால் அங்கு வசிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்காக பெருமாள் மலையினை அடுத்த பேத்துப்பாறை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளதாகவும், தற்போது புதுடெல்லி சென்று விட்டு திரும்பி வந்த உடன் தனது காதலரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பெருமாள் மலை பகுதியில் தங்கி இருந்த அவரை அப்பகுதி மக்கள் யாருக்கும் அடையாளம் தெரியாததால் பொதுமக்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story