மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பெருவிழா நடைபெற உள்ளதாக தகவல் பரவியதால் பரபரப்பு


மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பெருவிழா நடைபெற உள்ளதாக தகவல் பரவியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 May 2017 3:30 AM IST (Updated: 12 May 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் முன்னெச்சரிக்கையாக போலீசார் ரோந்து சென்றனர்.

மாமல்லபுரம்,

பா.ம.க.வின் வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த விழா மாநாட்டின்போது கிழக்கு கடற்கரை சாலை மரக்காணத்தில் இரு பிரிவினர் இடையே நடந்த கலவரத்தை தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரையில் இந்த விழா நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. அதன் பின்னர் மாநில அளவில் மாமல்லபுரம் கடற்கரையில் நடத்தப்படும் இந்த விழா நடைபெறவில்லை.

இதையடுத்து கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பா.ம.க.வினர் சிலர் மாமல்லபுரம் கடற்கரையில் சித்ரா பவுர்ணமி இளைஞர் பெருவிழா நடைபெற உள்ளதாகவும், வன்னிய இளைஞர்கள் அணிதிரண்டு வரவேண்டும் என்றும் தகவல் பரவ விட்டிருந்தனர்.

 கோர்ட்டு தடை உள்ள நிலையில், தடையை மீறி விழா நடத்தப்படுமா? என மாமல்லபுரம் போலீசார் பதறினர். மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பின்னர் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் காஞ்சீபுரம் மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் பி.வி.கே.வாசு, காஞ்சீபுரம் மத்திய மாவட்ட பா.ம.க. துணைசெயலாளர் மல்லை ராஜசேகர் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினர்.

அவர்கள் போலீசாரிடம் கூறும்போது:–

வதந்தி

சித்ரா பவுர்ணமி இளைஞர் பெருவிழா நடத்த பா.ம.க. தலைமை திட்டமிடவில்லை. பா.ம.க. தொண்டர்கள் சிலர் ஆர்வ கோளாறு காரணமாக இது போன்ற தகவலை பரவ விட்டிருக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க தலைமை முறைப்படி அறிவித்தால் மட்டுமே விழா நடத்த முடியும். குறிப்பாக கோர்ட்டு தடை உள்ளதால் வருங்காலங்களில் கோர்ட்டு மூலம் முறைப்படி அனுமதி பெற்றுதான் விழா நடத்தப்படும். தற்போது விழா நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் வந்த தகவல் வெறும் வதந்தியே.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story