பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவு வெளியானது 52.38 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்


பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவு வெளியானது 52.38 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்
x
தினத்தந்தி 12 May 2017 3:30 AM IST (Updated: 12 May 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் பி.யூ.கல்லூரிகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வில் 52.38 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவில் வெற்றி அடைந்துள்ளனர்.

கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் பி.யூ.கல்லூரிகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது.

கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி தன்வீர்சேட் பெங்களூருவில் நேற்று பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

52.38 சதவீதம் தேர்ச்சி


“கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 9-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 48 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியில் 17 ஆயிரத்து 422 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 6 லட்சத்து 79 ஆயிரத்து 61 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இதில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 697 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 52.38 ஆகும். கடந்த ஆண்டு இந்த தேர்ச்சி சதவீதம் 57.20 ஆகும்.

மாணவிகளே அதிகளவில் வெற்றி


மாணவர்கள் 44.74 சதவீதம் பேரும், மாணவிகள் 60.28 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவில் வெற்றி அடைந்துள்ளனர். கிராமப்புற, நகர்ப்புறங்களை ஒப்பிட்டு பார்த்தால், நகர்ப்புற மாணவர்கள் 52.88 சதவீதம் பேரும், கிராமப்புறத்தில் 50.72 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கலைப்பிரிவில் 35.05 சதவீதம் பேரும், வணிக பிரிவில் 60.71 சதவீதம் பேரும், அறிவியல் பிரிவில் 60.71 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கன்னட வழியில் படித்தவர்கள் 40.68 சதவீதம் பேரும், ஆங்கில வழியில் படித்தவர்கள் 61.41 சதவீதம் பேரும் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். கலைப்பிரிவில் 600-க்கு 589 மதிப்பெண்களும், வணிக பிரிவில் 595 மதிப்பெண்களும், அறிவியல் பிரிவில் 596 மதிப்பெண்களும் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளனர். இந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் யார் என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது.

100-க்கு 100 மதிப்பெண்கள்

தர வாரியாக மதிப்பெண்கள் விவரங்களை வெளியிடக்கூடாது என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை என்னால் மீற முடியாது. தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்களில் 45 ஆயிரத்து 983 பேர் சிறப்பிடம் அதாவது 85 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை எடுத்துள்ளனர். 1 லட்சத்து 92 ஆயிரத்து 12 பேர் முதல் வகுப்பிலும், 71 ஆயிரத்து 532 பேர் 2-வது வகுப்பிலும், 46 ஆயிரத்து 170 பேர் 3-வது வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கன்னட பாடத்தில் 65 பேரும், சமஸ்கிருதத்தில் 514 பேரும், வரலாற்றில் 58 பேரும், பொருளியலில் 41 பேரும், புவியியலில் 102 பேரும், கணக்கு பதிவியலில் 991 பேரும், புள்ளியலில் 1,282 பேரும், இயற்பியலில் 87 பேரும், வேதியியலில் 511 பேரும், கணிதத்தில் 1,470 பேரும், உயிரியலில் 488 பேரும், கணினி அறிவியலில் 2,243 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

கேள்வித்தாள் வெளியாகவில்லை

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாகி நிறைய குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் இந்த ஆண்டு எந்த குழப்பமும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் தேர்வை நடத்த நாங்கள் கடும் நடவடிக்கை எடுத்தோம். அதன் காரணமாக கேள்வித்தாள் வெளியாகவில்லை. எந்த குழப்பமும் உண்டாகவில்லை. இந்த ஆண்டு நேர்மையான முறையில் மிக சரியாக தேர்வு நடைபெற்றது.

அதனால் இந்த ஆண்டு உண்மையான தேர்ச்சி சதவீதம் நமக்கு கிடைத்துள்ளது. வரும் காலங்களில் கல்வி தரத்தை உயர்த்தவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக இந்த ஆண்டு 55 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம். நான் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு பள்ளி-கல்லூரிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இதற்காக ரூ.470 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

துணைத்தேர்வு

தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 3 அரசு கல்லூரிகள், 2 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 32 தனியார் கல்லூரிகள் என மொத்தம் 37 கல்லூரிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. அதே நேரத்தில் கடந்த ஆண்டு 91 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. இந்த 132 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதில் 3 அரசு கல்லூரிகளும், ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியும், 127 அரசு உதவி பெறாத தனியார் கல்லூரிகளும், ஒரு பிரிக்கப்பட்ட(பைபர்கேடடு) கல்லூரியும் அடங்கும்.

விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 24-ந் தேதி ஆகும். இதற்கு கட்டணமாக ரூ.1,260 செலுத்த வேண்டும். தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு வருகிற ஜூன், ஜூலை மாதம் நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாள் ஆகும். விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க வருகிற 19-ந் தேதி கடைசி நாள் ஆகும். இதற்கு ஒரு பாடத்திற்கு கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும்.

இவ்வாறு தன்வீர்சேட் கூறினார்.

இந்த பேட்டியின்போது பி.யூ. கல்லூரி கல்வி இயக்குனர் ஷிகா உடன் இருந்தார்.

Next Story