செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை


செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 May 2017 3:03 AM IST (Updated: 12 May 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க ஆற்றுக்குள் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளங்களை தோண்டி மாட்டு வண்டிகள், லாரிகள் செல்ல முடியாதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

திருக்கனூர்,

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அரசுக்கு அந்த பகுதி மக்கள் புகார் மனு கொடுத்தனர். தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதால் சங்கராபரணி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தின் தூண்கள் பாதிக்கப்பட்டு பாலம் இடிந்துவிழும் அபாயமும் ஏற்பட்டது.

பாலத்தை ஆய்வு

இந்த நிலையில் வில்லியனூர் துணை தாசில்தார் சிவராஜ் தலைமையில் வருவாய் துறையினர் செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றுக்கு சென்று, மணல் அள்ளப்பட்டதால் சேதமடைந்த பாலத்தின் தூண் மற்றும் மணல் அள்ளிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் மணல் கொள்ளையை தடுக்கும் வகையில் சங்கராபரணி ஆற்றுக்குள் மாட்டு வண்டியோ, டிப்பர் லாரியோ செல்லமுடியாதபடி பொக்லைன் எந்திரம் மூலம் பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்களை தோண்டினர். இதனால் அங்கு மணல் கொள்ளை தற்போது தடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மணல் கொள்ளையில் ஈடுபடும் மாட்டுவண்டிகள், பத்துக்கண்ணு சந்திப்பு வழியாக செல்வதால் அங்கு சோதனைச்சாவடி அமைத்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

Next Story