வாடகைத்தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறுமியை ஈரான் நாட்டு தந்தையுடன் அனுப்ப ஐகோர்ட்டு மறுப்பு


வாடகைத்தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறுமியை ஈரான் நாட்டு தந்தையுடன் அனுப்ப ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 12 May 2017 4:06 AM IST (Updated: 12 May 2017 4:05 AM IST)
t-max-icont-min-icon

வாடகைத்தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறுமியை ஈரான் நாட்டு தந்தையுடன் அனுப்ப மும்பை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

மும்பை,

வாடகைத்தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறுமியை ஈரான் நாட்டு தந்தையுடன் அனுப்ப மும்பை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

வாடகைத்தாய்

மும்பை ஐகோர்ட்டில் ஈரான் நாட்டை சேர்ந்த ஒருவர், ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

எனக்கு வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர், அந்த வாடகைத்தாயை நான் திருமணம் செய்து கொண்டேன். அதன்பின்னர், எங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. என்னுடைய மகளை எனது கண்காணிப்பில் விடுமாறு மும்பை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும், இதனை பின்பற்றாமல், என் மகளை வாடகைத்தாய் சட்டவிரோதமாக அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மகளை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.

குணமற்றவர்

இந்த வழக்கை பரிசீலித்த நீதிபதிகள், வாடகைத்தாய் மற்றும் அந்த சிறுமியை கடந்த மாதம் கோர்ட்டுக்கு அழைத்து விசாரித்தனர். இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் ஆர்.வி.மோரே மற்றும் அனுஜா பிரபுதேசாய் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறுமியை அவளது ஈரான் நாட்டு தந்தையுடன் அனுப்ப மறுப்பு தெரிவித்தனர். இதுபற்றி மேலும் நீதிபதிகள் கூறியதாவது:-

மனுதாரர், வாடகைத்தாய் மற்றும் விசாரணை அதிகாரியுடன் நாங்கள் கலந்து பேசினோம். இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தெரிகிறது. மனுதாரர் குடும்பநல கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நம்புகிறார். அதேசமயம், மனுதாரரின் குணம் சரி இல்லை என்றும், சிறுமி தன்னுடைய பராமரிப்பில் வளர வேண்டும் என்று வாடகைத்தாய் கூறுகிறார்.

கல்வி நிறுவனம்


சிறுமியின் நலனை கருத்தில் கொண்டு, அவளது சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய கூடிய காப்பகம் அல்லது கல்வி நிறுவனத்தில் அவளை சேர்க்க எண்ணுகிறோம். அங்கு வைத்து சிறுமியின் பெற்றோர் அவளை சந்தித்து பேச உரிமை அளிக்கப்படும்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 16-ந் தேதி தள்ளிவைக்கப்படுகிறது. சிறுமியை இதுபோன்ற கல்வி நிறுவனத்தில் சேர்க்க விருப்பம் இருக்கிறதா? என்பதை அன்றைய தினம் அவரது வாடகைத்தாய் தெரியப்படுத்த வேண்டும். சிறுமியை சேர்க்க கூடிய நல்ல கல்வி நிறுவனங்களின் பெயரை அரசு தரப்பு வக்கீல் குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story