மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு கலெக்டர் சிவஞானம் தகவல்
மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பான அளவைவிட 41 சதவீதம் குறைவாகவும், வடகிழக்கு பருவமழை 59 சதவீதம் குறைவாகவும் கிடைக்கப் பெற்றதால் மாவட்டத்தில் குடிநீர் ஆதாரங்களில் நீர்வரத்து வெகுவாக குறைந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும். அனைத்து பகுதிகளிலும் குடிநீரை அனைவருக்கும் சீராக வழங்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஏற்கனவே ரூ.3 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நகராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக ரூ.5 கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதையும், மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பதை தடுக்கவும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
மின் மோட்டார்கள் பறிமுதல்இந்த குழுக்கள் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அனுமதியின்றி முறையற்ற வகையில் குழாய்கள் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு வருவதை கண்டுபிடித்து 305 குழாய் இணைப்புகளை துண்டித்தும் அனுமதியின்றி மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்பட்டு வருவதை கண்டறிந்தும் இதுவரை 764 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த பணியில் பொதுமக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். தங்களது குடியிருப்பு பகுதிகளில் குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக நோக்கில் செயல்படும் நிறுவனங்கள் ஆகியவற்றில் அனுமதியின்றி முறையற்ற வகையில் குழாய் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு வருவதை அறிந்தாலோ, மின் மோட்டார் மூலம் அனுமதியின்றி குடிநீர் உறிஞ்சப்பட்டு வருவது பொது மக்களின் கவனத்திற்க தெரியவந்தாலோ அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.