துப்புரவு பணியில் அலட்சியம் காட்டும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் கலெக்டர் உத்தரவு


துப்புரவு பணியில் அலட்சியம் காட்டும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 13 May 2017 4:30 AM IST (Updated: 12 May 2017 9:45 PM IST)
t-max-icont-min-icon

சித்தூர் மாவட்டத்தில் துப்புரவு பணியில் அலட்சியம் காட்டும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்

சித்தூர்,

சித்தூர் மாவட்டத்தில் தூய்மைப்பணிகள் குறித்து மாநகராட்சி, நகராட்சி கமி‌ஷனர்களுடன் கலெக்டர் பிரதியும்ணா ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கலெக்டர் பிரதியும்ணா பேசியதாவது:–

சித்தூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மைப்பணிகளில் கமி‌ஷனர்கள் தீவிரம் காட்ட வேண்டும். தற்போது குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக நிலவுவதால் அந்த பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். சித்தூர் மாநகராட்சி மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சியில் அதிக குப்பைகள் குவிவதாகவும், கழிவுநீர் தேங்கியிருப்பதாகவும் புகார்கள் வருகின்றன. எனவே இந்த குறைகளை போக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் சாலையோரங்களில் குவியும் குப்பைகளை அகற்றுவது துப்புரவு பணியாளர்களின் தலையாய கடமை.

ஆனால் அவர்கள் இந்த பணியில் சரிவர ஈடுபடவில்லை என்று பல்வேறு தரப்பு மக்களும் குற்றம்சாட்டுகிறார்கள். எனவே துப்புரவு பணியில் அலட்சியம் காட்டுபவர்கள் மீது பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

உறுதி எடுக்க வேண்டும்

ஆகஸ்ட் மாதத்திற்குள் சித்தூர் மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக உருவாக்க அனைத்து கமி‌ஷனர்களும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சித்தூர் மாநகராட்சி கமி‌ஷனர் பாலசுப்பிரமணியம் மற்றும் நகராட்சி கமி‌ஷனர்கள் விஸ்வநாத் (மதனப்பள்ளி), ராமச்சந்திரராவ் (பலமனேரு), ஹரிபாபு (புத்தூர்), சந்திரய்யா (ஸ்ரீகாளஹஸ்தி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story