தஞ்சை அருகே பொன்னன் ஏரியில் மண் எடுக்கும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


தஞ்சை அருகே பொன்னன் ஏரியில் மண் எடுக்கும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 May 2017 4:15 AM IST (Updated: 12 May 2017 10:30 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் ஏரி, குளங்கள் உள்ளன.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் ஏரி, குளங்கள் உள்ளன. இவற்றில் இருந்து விவசாயம், வீட்டு உபயோகம், மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு வண்டல் மண், சவுடு மண், களிமண் இலவசமாக எடுத்து கொள்ள நிபந்தனைக்குட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி மண் எடுக்கும் பணியை தஞ்சையை அடுத்த குளிச்சப்பட்டு கிராமத்தில் உள்ள பொன்னன் ஏரியில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் 414 ஏரிகள் உள்ளன. தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூர் ஆகிய 5 தாலுகாக்களில் மண் எடுத்து கொள்ள அனுமதிக்கும்படி 302 பேர் விண்ணப்பித்துள்ளனர். குளிச்சப்பட்டு கிராமத்தில் உள்ள பொன்னன் ஏரியில் மண் எடுத்து கொள்ள 26 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு உடனடியாக ஆணை வழங்கப்பட்டுள்ளது. குளங்கள், ஏரிகளில் இருந்து மண் எடுப்பதால் நீர்பிடிப்பு பரப்பளவு அதிகரிக்கப்படும். மண் எடுக்க அனுமதி பெறுவோர் ஏரி, குளங்களில் இருந்து பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மண் எடுத்து செல்ல வேண்டும் என்றார்.

இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகேசன், பொதுப்பணித்துறையின் கல்லணைக்கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் ரேவதி, உதவி செயற்பொறியாளர்கள் சண்முகவேல், கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story