மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 85.76 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி கடந்த ஆண்டை காட்டிலும் 3.71 சதவீதம் குறைவு


மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 85.76 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி கடந்த ஆண்டை காட்டிலும் 3.71 சதவீதம் குறைவு
x
தினத்தந்தி 13 May 2017 4:15 AM IST (Updated: 12 May 2017 11:30 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 85.76 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் 268 பள்ளிகளில் இருந்து 20 ஆயிரத்து 409 மாணவர்களும், 21 ஆயிரத்து 657 மாணவிகளும் என மொத்தம் 42 ஆயிரத்து 66 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிகள் நேற்று வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நிமிடங்களில் மாணவ- மாணவிகளின் செல்போனுக்கே அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பாட வாரியாக குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால் மாணவ- மாணவிகள் ஒவ்வொருவரும் எந்தவித சிரமமும் இன்றி தங்களது வீட்டில் இருந்தவாறே செல்போன் குறுந்தகவல் மூலம் தாங்கள் பாட வாரியாக பெற்ற மதிப்பெண் விவரத்தை தெரிந்துகொண்டனர். ஒன்றிரண்டு மாணவ- மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று அங்குள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த தேர்வு முடிவுகள் விவரத்தையும் பார்த்து தெரிந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் பிளஸ்-2 தேர்வில் 36 ஆயிரத்து 76 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 16 ஆயிரத்து 814 பேர். மாணவிகள் 19 ஆயிரத்து 262 பேர்.

இதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 82.39 சதவீதமாகும். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88.94 சதவீதமாகும். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 85.76 ஆகும்.

கடந்த ஆண்டை காட்டிலும் குறைவு

கடந்த ஆண்டு 89.47 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 3.71 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் பெரிய அளவில் உயராவிட்டாலும் சராசரியாக 1 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்து கொண்டு வந்தது. தற்போது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 3.71 சதவீதம் குறைந்துள்ளது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story