பேச்சுவார்த்தை என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி அணியினர் நாடகமாடுகின்றனர் செம்மலை எம்.எல்.ஏ. பேச்சு
எடப்பாடி பழனிசாமி அணியினர் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகமாடுகின்றனர்
சேலம்,
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க.(புரட்சி தலைவி அம்மா) அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா, கட்சி வளர்ச்சி குறித்த பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு அமைப்பு செயலாளர் செம்மலை எம்.எல்.ஏ. பேசியதாவது:–
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா என்னை தற்காலிக சபாநாயகராக ஆக்கியது எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், ஒரே குடும்பம் ஆட்சியில் இருக்க கூடாது என்ற 2 கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை அவர்கள் பதில் கூறவில்லை. எடப்பாடி பழனிசாமி அணியினர் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகமாடுகின்றனர்.
சரியான முறையா?முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதாவது, உங்களை முதல்–அமைச்சராக தேர்ந்தெடுத்த முறை சரியான முறையா?. உங்களை லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் முறைப்படி தேர்ந்தெடுத்தார்களா? என்பதற்கு பதில் கூறுங்கள். அமலாக்க பிரிவு துறையினரால் தினகரன் கைது செய்ததை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கி உள்ளார்.
கடந்த வாரம் தேர்தல் ஆணையம் மாநில கட்சிகளின் பொதுச்செயலாளர்களின் பெயர்களை பட்டியலிட்டது. அதில் அ.தி.மு.க.வின் இடம் காலியாக உள்ளது. சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையமே அங்கீகரிக்கவில்லை. பின்னர் அவரால் நியமிக்கப்பட்ட துணை செயலாளர் பதவி எப்படி செல்லும். இவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முதல்–அமைச்சர் பதவி எப்படி செல்லுபடியாகும்.
தங்களை பாதுகாத்து கொள்ள ஓ.பன்னீர்செல்வம் என்ற முகமூடி அவர்களுக்கு தேவைப்படுகிறது. அதற்கு நீங்கள் ஒருபோதும் துணைபோக கூடாது. தொண்டர்கள் விருப்பப்படி ஒருபோதும் அந்த அணியினருடன் சேரக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பெரிய வெற்றிடம்முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது:–
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. 1½ கோடி அ.தி.மு.க. தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உள்ளனர். அங்குள்ள 122 எம்.எல்.ஏ.க்களும் அங்கு கால சூழ்நிலை கைதிகளாக உள்ளனர். அவர்களும் சிந்தித்து பார்க்க வேண்டும். 30 ஆண்டு காலம் ஜெயலலிதா காரின் பின் சீட்டில் இருந்த சசிகலா, அவர் எப்போது மறைவார், ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றலாம் என்ற கனவில் இருந்துள்ளார்.
அதனால் நல்ல ஆட்சி வேண்டும் என்றால் சசிகலா குடும்பத்தை வெளியேற்றிருக்க வேண்டும். இரட்டை இலை சின்னம் என்பது ஒவ்வொரு தொண்டனுக்கும் சொந்தமாகும். இதை பெறுவதற்காக தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார். சசிகலாவை கட்சியில் இருந்து வெளியேற்றினால் தேர்தல் வராது. இல்லையெனில் கட்டாயமாக தேர்தல் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மங்களை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யாமல் இருக்கும் தமிழக அரசை கண்டிக்கிறோம், குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழகஅரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.