பிளஸ்–2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 26 ஆயிரத்து 88 மாணவ–மாணவிகள் தேர்ச்சி
பிளஸ்–2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 26 ஆயிரத்து 88 மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
ஈரோடு,
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் 207 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 26 ஆயிரத்து 983 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 26 ஆயிரத்து 88 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.69 சதவீதமாகும். தேர்வு முடிவுகளை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பாலமுரளி வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:–
ஈரோடு மாவட்ட அளவில் 12 ஆயிரத்து 890 மாணவர்களும், 14 ஆயிரத்து 93 மாணவிகளும் என 26 ஆயிரத்து 983 பேர் தேர்வு எழுதினர். இதில் 12 ஆயிரத்து 311 மாணவர்களும், 13 ஆயிரத்து 777 மாணவிகளும் என 26 ஆயிரத்து 88 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்கள் 95.51 சதவீதமும், மாணவிகள் 97.76 சதவீதமும் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
100 சதவீதம் தேர்ச்சிஈரோடு மாவட்டத்தில் உள்ள 23 அரசு பள்ளிக்கூடங்களில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் அந்த 23 பள்ளிக்கூடங்களும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து உள்ளன. நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் 5, நலப்பள்ளிகள் 1, மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் 51, சுயநிதி பள்ளிகள் 4 என மொத்தம் 84 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை 90 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 56 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 490 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.88 சதவீதமாகும். கடந்த ஆண்டு அரசு பள்ளிக்கூடங்கள் தேர்ச்சி விகிதம் 94.85 சதவீதமாக இருந்தது. ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் தேர்வு எழுதிய 21 மாணவ–மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர். கடந்த ஆண்டு 98.08 சதவீதம் மட்டுமே இந்த பள்ளியில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர். மொத்தமாக ஈரோடு மாவட்டம் 96.69 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3–ம் இடத்தை பிடித்து உள்ளது.
இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பாலமுரளி கூறினார். அவருடன் மாவட்ட கல்வி அதிகாரி (கோபி) கலைச்செல்வன், நேர்முக உதவியாளர்கள் பூபதி, பிரகாஷ், தலைமை ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.