பரபரப்பு பதற்றம் கொடுக்காத பிளஸ்–2 தேர்வு முடிவு: களை இழந்த பள்ளி வளாகங்கள்
வழக்கமான பரபரப்போ, பதற்றமோ இல்லாமல் பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. பள்ளி வளாகங்கள் களை இழந்து காணப்பட்டன.
தேனி,
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியாகிறது என்றாலே மாணவ, மாணவிகளிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் ஒருவித பதற்றம், பரபரப்பு தொற்றிக் கொள்ளும். மாநில, மாவட்ட அளவில் சாதனை பட்டியலில் இடம் பிடிப்பது யார்? பரிசுகளும், பாராட்டுகளும் குவியப் போவது யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு ஏற்படுவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு தேர்வு முடிவு புதிய நடைமுறையில் வெளியிடப்பட்டது. மதிப்பெண்களை கொண்டு ரேங்க் அடிப்படையில் இதுவரை அறிவிக்கப்பட்டு வந்த முடிவு, இந்த ஆண்டு கிரேடு அடிப்படையில் வெளியிடப்பட்டது. இதனால், மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் என்ற வழக்கமான அறிவிப்பு இன்றி, கிரேடு அடிப்படையில் முடிவு அறிவிக்கப்பட்டது.
களை இழந்தனவழக்கமாக தேர்வு முடிவுகளை காண்பதற்கு பள்ளிகளில் மாணவ–மாணவிகள் குவிந்து இருப்பார்கள். மேலும் மாநில, மாவட்ட அளவில் மற்றும் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ–மாணவிகளை பாராட்ட பள்ளிகளில் சக மாணவ–மாணவிகளும், பெற்றோர்களும் குவிந்து இருப்பார்கள். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ–மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து பள்ளி வளாகமே களைகட்டி காணப்படும்.
ஆனால், இந்த ஆண்டு புதிய நடைமுறை காரணமாக பள்ளி வளாகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. செல்போன் எண்ணுக்கே தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்ற அறிவிப்பால் பள்ளிகளுக்கு வந்து தேர்வு முடிவுகளை அறிய குறைந்த அளவில் தான் மாணவ, மாணவிகள் வந்து இருந்தனர். இதுபோன்ற காரணங்களால் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நேற்று பள்ளி வளாகங்கள் களை இழந்து காணப்பட்டன. வழக்கமான பதற்றமோ, பரபரப்போ இல்லை.