மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வங்கி பணம் ரூ.7½ கோடி கடத்தல் 4 பேருக்கு வலைவீச்சு
மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வங்கி பணம் ரூ.7½ கோடியை கடத்தி சென்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மங்களூரு,
மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வங்கி பணம் ரூ.7½ கோடியை கடத்தி சென்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வங்கி பணம் ரூ.7½ கோடிதட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு டவுனில் எய்யாடி பகுதியில் ஆக்சிஸ் வங்கியின் பணம் இருப்பு வைக்கும் மையம் உள்ளது. இங்கிருந்து பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பணப் பரிமாற்றம் நடவடிக்கை தனியார் பாதுகாப்பு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் பெங்களூரு டவுன் கோரமங்களாவில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளைக்கு ரூ.7 கோடியே 50 லட்சம் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வேனை டிரைவர் கரிபசவா என்பவர் ஓட்டினார். அதில் துப்பாக்கி ஏந்திய காவலாளிகளாக பூவண்ணா, பசப்பா ஆகியோரும், மேற்பார்வையாளர் பரசுராமா ஆகியோரும் இருந்தனர்.
போலீசில் புகார்எய்யாடி மையத்தில் இருந்து வேன் மூலம் அனுப்பும் பணம் நேற்று காலை கோரமங்களா வங்கி கிளைக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் நேற்று முன்தினம் எய்யாடியில் இருந்து வேன் மூலம் அனுப்பப்பட்ட பணம் பெங்களூரு கோரமங்களா வங்கி கிளைக்கு வந்து சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள் இதுபற்றி எய்யாடியில் உள்ள மைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றி அவர்கள் தனியார் பாதுகாப்பு நிறுவனத்திடம் தெரிவித்தனர். உடனே அவர்கள், வேனில் சென்ற 4 பேரின் செல்போன் எண்களுக்கும் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் 4 பேரின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து ஆக்சிஸ் வங்கியின் பணம் இருப்பு வைக்கும் மைய அதிகாரிகள், கங்கனாடி டவுன் போலீசில் புகார் செய்தனர். அதில், எய்யாடியில் இருந்து கோரமங்களா வங்கி கிளைக்கு ரூ.7½ கோடி அனுப்பி வைத்தோம். ஆனால் பணம் மற்றும் வேனுடன் டிரைவர் உள்பட 4 பேரும் மாயமாகிவிட்டனர். இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன் பேரில் கங்கனாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
வேன் மீட்புஇதற்கிடையே மாயமான வேன் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா கல்லஹள்ளியில் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு காலி நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவி டி சன்னன்னவர் மற்றும் உன்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனை மீட்டனர். ஆனால் வேனில் டிரைவர் உள்பட 4 பேரும் இல்லை. அவர்கள் 4 பேரும் சேர்ந்து ரூ.7½ கோடி பணத்தை கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி உன்சூர் போலீசார், கங்கனாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே கங்கனாடி போலீசாரும் மைசூருவுக்கு விரைந்துள்ளனர். பணத்துடன் தலைமறைவான 4 பேரையும் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தலைமறைவான 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4 தனிப்படைகள்இதுபற்றி மங்களூரு மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் பட்டீலிடம் ‘தினத்தந்தி‘ நிருபர் கேட்ட போது, ‘எய்யாடி பகுதியில் இருந்து கோரமங்களா வங்கி கிளைக்கு தனியார் பாதுகாப்பு நிறுவன வேனில் ரூ.7½ கோடி அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அந்த பணத்தையும், வேனையும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த டிரைவர் உள்பட 4 பேர் கடத்திச் சென்றனர். இதில் கடத்தப்பட்ட வேனை உன்சூர் அருகே மீட்டுள்ளோம். பணத்தை கடத்திச் சென்ற 4 பேரையும் தீவிரமாக தேடி வருகிறோம். அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன‘ என்றார்.
இதேபோல் பெங்களூருவில் கடந்த ஆண்டு (2016) நவம்பர் மாதம் ‘பேங்க் ஆப் இந்தியா‘ வங்கியில் இருந்து அதன் ஏ.டி.எம். மையத்திற்கு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் மூலம் ரூ.1.37 கோடி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பணத்துடன் டிரைவரான தமிழகத்தை சேர்ந்த டொமினிக் ராய் என்பவர் தலைமறைவானார். பின்னர் அவரை போலீசார் கைது செய்து பணத்தை மீட்டது குறிப்பிடத்தக்கது.
பரபரப்புஇந்த நிலையில் எய்யாடியில் இருந்து கோரமங்களாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வங்கி பணம் ரூ.7½ கோடி கடத்தப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.