கூடலூரில் கோடை விழா தொடங்கியது 40 கிலோ வாசனை பொருட்களால் உருவான ‘ஹெலிகாப்டர்’


கூடலூரில் கோடை விழா தொடங்கியது 40 கிலோ வாசனை பொருட்களால் உருவான ‘ஹெலிகாப்டர்’
x
தினத்தந்தி 13 May 2017 4:00 AM IST (Updated: 13 May 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் தொடங்கிய கோடை விழாவில் 40 கிலோ வாசனை பொருட்களை கொண்டு உருவான ஹெலிகாப்டரை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நடைபெற்று வருவதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவருகின்ற வகையில் கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. கூடலூரில் உள்ள செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் விழா நடைபெறுகிறது. கோடை விழாவை மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கடல் கடந்து வாணிபம்

உலக நாகரிக வரலாற்றில் அசசீரியர், அரேபியர், ரோமானியர், எகிப்தியர், சீனர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுகாரர்கள், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் காலம் வரை இந்தியாவில் விளையக்கூடிய வாசனை திரவிய பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். ரிக் வேதத்தில் கூட வாசனை திரவியத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள செல்வங்களை கண்டு போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர்கள் இந்தியாவை காலனி நாடாக மாற்றினர்.

1497–ம் ஆண்டு வாஸ்கோடகாமா கடற்பயணம் மூலம் கோழிக்கோடு வழியாக இந்தியாவுக்கு வந்தார். அதன்பின்னர் இங்குள்ள வாசனை திரவிய பொருட்களை எடுத்து செல்வதற்காக கிறிஸ்டோபர் கொலம்பஸ், மெகல்லன் வந்தனர். இவ்வாறு வாசனை திரவிய பொருட்களால் அன்னிய நாட்டினரையும் ஈர்த்தது இந்தியா. இன்றைக்கும் வாசனை திரவிய பொருட்களால் கடல் கடந்தும் வாணிபம் நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகள் வாசனை திரவிய பொருட்களை அதிகம் விளைவித்து பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ராணுவ ஹெலிகாப்டர்

கண்காட்சியில் வனம், சுற்றுலா உள்பட பல்வேறு துறைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் 20–க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் ஏலக்காய், கிராம்பு, லவங்க பட்டை, சோம்பு, மல்லி, சீரகம், வெந்தயம், குறுமிளகு, கசகசா, ஜாதிபத்திரி உள்பட பலவகை வாசனை விளைபொருட்கள் என மொத்தம் 40 கிலோவில் 17 அடி நீளம், 5 அடி அகலம், 7 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்த ராணுவ ஹெலிகாப்டர் அனைவரையும் கவர்ந்தது.

இதேபோல் வனத்துறை சார்பில் குகைக்குள் புலி ஒன்று படுத்து இருப்பது போல் தத்ரூபமாக அரங்கு வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனை பொதுமக்கள், மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். அந்த பொருட்களின் முன்பாக நின்று கொண்டு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து கொள்வதில் பொதுமக்கள் அதிகஆர்வம் காட்டினர்.

ஊர்வலம் - புலியாட்டம்

முன்னதாக வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பேண்டுவாத்தியங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். ஊர்வலத்தின் இடையே புலியாட்டமும் நடைபெற்றது. கண்காட்சி அரங்குகளை எம்.பி.க்கள் கோபாலகிருஷ்ணன், கே.ஆர்.அர்ஜூனன், தமிழக ஆவின் வாரிய இணைய தலைவர் அ.மில்லர், குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு, நகர அ.தி.மு.க. செயலாளர் சையத் அனூப்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story