பா.ஜனதாவின் குற்றப்பத்திரிகையை முழுமையாக நிராகரிக்கிறேன் வறட்சி குறித்து பாராளுமன்றத்தில் எடியூரப்பா பேசியது உண்டா? சித்தராமையா கேள்வி


பா.ஜனதாவின் குற்றப்பத்திரிகையை முழுமையாக நிராகரிக்கிறேன் வறட்சி குறித்து பாராளுமன்றத்தில் எடியூரப்பா பேசியது உண்டா?  சித்தராமையா கேள்வி
x
தினத்தந்தி 13 May 2017 2:30 AM IST (Updated: 13 May 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

வறட்சி குறித்து பாராளுமன்றத்தில் எடியூரப்பா பேசியது உண்டா? என்று 4 ஆண்டு சாதனை விளக்க கையேட்டை வெளியிட்டு சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு,

பா.ஜனதாவின் குற்றப்பத்திரிகையை முழுமையாக நிராகரிக்கிறேன். வறட்சி குறித்து பாராளுமன்றத்தில் எடியூரப்பா பேசியது உண்டா? என்று 4 ஆண்டு சாதனை விளக்க கையேட்டை வெளியிட்டு சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

சாதனை விளக்க கையேடு

முதல்–மந்திரி சித்தராமையா கர்நாடக காங்கிரஸ் முதல்–மந்திரியாக பதவியேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்தது. சித்தராமையா அரசு இன்று(சனிக்கிழமை) 5–வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த சாதனை விளக்க கையேடு வெளியிடும் நிகழ்ச்சி பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் சித்தராமையா கலந்து கொண்டு, அந்த கையேட்டை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடகத்தில் எனது தலைமையில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்று இன்றுடன்(அதாவது, நேற்று) 4 ஆண்டுகள் ஆகிறது. நாங்கள் தேர்தலின்போது 165 வாக்குறுதிகள் வழங்கினோம். இதில் இதுவரை 155 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மீதமுள்ள வாக்குறுதிகளும் இருக்கும் ஆட்சி காலத்திற்குள் அமல்படுத்துவோம். அன்ன பாக்ய, ஷீர பாக்ய, வித்யாஸ்ரீ உள்பட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறோம். மாநிலத்தில் பசியை போக்கியுள்ளோம்.

உள்ளடக்கிய வளர்ச்சி

நான் முதல்–மந்திரியாக பதவி ஏற்ற பிறகு இதுவரை 5 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளேன். இன்னும் ஒரு பட்ஜெட் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும். நாங்கள் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம். ஆனால் பா.ஜனதாவினர் சிறுபான்மையினரை தவிர்த்துவிட்டு வளர்ச்சியை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இது சாத்தியம் இல்லை. அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களின் கொள்கை, குறிகோள்.

இது பசவண்ணர் பிறந்த பூமி. அவர் சமத்துவ சமுதாயத்தை படைக்க அரும்பாடுபட்டார். நாங்கள் சமூகநீதியை நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறோம். இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அரசு என்று பா.ஜனதாவினர் குற்றம் சாட்டுகிறார்கள். இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காகவும் நாங்கள் திட்டங்களை செயல்படுத்துகிறோம். அன்ன பாக்ய திட்டம் மூலம் 1.10 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதன் மூலம் 4 கோடி பேருக்கு உணவு கிடைக்கிறது. 1.02 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக பால் வினியோகம் செய்கிறோம்.

ஒரு பொய்யை திரும்ப திரும்ப...

1.50 லட்சம் கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கப்பட உள்ளது. பாலுக்கு லிட்டருக்கு ஊக்கத்தொகை ரூ.5 வழங்குகிறோம். இந்த திட்டங்கள் அனைத்து சமுதாய மக்களுக்கும் கிடைக்கிறது. அதனால் எங்கள் அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமேயான அரசு என்று சொல்வதில் உண்மை இல்லை. பா.ஜனதாவினர் ஒரு பொய்யை திரும்ப திரும்ப 100 முறை சொல்லி உண்மையாக்க முயற்சி செய்கிறார்கள். இதை மக்கள் நம்ப தயாராக இல்லை.

பயிர்க்கடனை தள்ளுபடி செய்யுமாறு எடியூரப்பா சொல்கிறார். பாராளுமன்றத்தில் விவசாய கடன் தள்ளுபடி பற்றி அவர் பேசாதது ஏன்?. கர்நாடகத்தில் நிலவும் வறட்சி பற்றி அவர் பாராளுமன்றத்தில் பேசியது உண்டா?. எடியூரப்பா ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று சொன்னார். ஆட்சியில் இருக்கும்போது ஒன்றும், எதிர்க்கட்சியில் இருக்கும்போது வேறொன்றும் பேசுவது எடியூரப்பாவின் வாடிக்கை ஆகும்.

விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு

கடந்த 4 ஆண்டுகளில் நீர்ப்பாசனத்துறைக்கு ரூ.62 ஆயிரத்து 575 கோடியும், சிறுபான்மையினர் நலனுக்கு ரூ.6 ஆயிரம் கோடியும், மின்சார துறைக்கு ரூ.61 ஆயிரத்து 230 கோடியும், கல்வித்துறைக்கு ரூ.99 ஆயிரம் கோடியும், விவசாயத்துக்கு ரூ.44 ஆயிரத்து 655 கோடியும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு ரூ.20 ஆயிரத்து 35 கோடியும், வீட்டு வசதித்துறைக்கு ரூ.15 ஆயிரத்து 760 கோடியும் நிதி ஒதுக்கியுள்ளோம். முந்தைய பா.ஜனதா அரசுடன் ஒப்பிடுகையில் நாங்கள் அவர்களை விட பல மடங்கு நிதியை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இதன் மூலம் எங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும்.

கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். பா.ஜனதா ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கர்நாடகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கான புள்ளிவிவரங்கள் என்னிடம் உள்ளன. வறட்சி நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு ரூ.1,782 கோடி கொடுப்பதாக கூறியது. அதில் இதுவரை ரூ.1,685 கோடி மட்டுமே விடுவித்துள்ளது. இதில் இதுவரை ரூ.1,100 கோடியை 19 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளோம். மீதமுள்ள தொகை படிப்படியாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

முழுமையாக நிராகரிக்கிறேன்

எங்கள் அரசு மீது பா.ஜனதாவினர் குற்றப்பத்திரிகை என்ற பெயரில் கையேட்டை வெளியிட்டுள்ளனர். எங்கள் மீது குற்றப்பத்திரிகையை வெளியிட பா.ஜனதாவினருக்கு தகுதி இல்லை. அதை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். எடியூரப்பா உள்பட அவருடைய ஆட்சியின்போது மந்திரிகளாக இருந்த பலர் மீது கோர்ட்டுகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எடியூரப்பா உள்பட சிலர் சிறைக்கு சென்று வந்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததால் பா.ஜனதாவினர் துவண்டுபோய் உள்ளனர். எங்கள் அரசு மீது எடியூரப்பா கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை எனது தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்ளும்.

யார் முதல்–மந்திரி

காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்–மந்திரி என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும். மீண்டும் நானே முதல்–மந்திரி ஆவேன் என்று நான் சொல்லவில்லை. கர்நாடகத்தில் கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் நாங்கள் சிறப்பு அதிகாரிகள் குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story