குடிமங்கலத்தில் வறட்சிப்பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டார்
குடிமங்கலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் எஸ்.ஜெயந்தி பார்வையிட்டார்.
குடிமங்கலம்,
திருப்பூர் மாவட்டத்தில் மழை குறைந்ததால் விவசாய நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பொன்னேரி, புக்குளம் ஊராட்சி, கொண்டம்பட்டி ஊராட்சி, வேலாயுதம் கவுண்டன்புதூர் மற்றும் பெரியபட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்டு காய்ந்த தென்னை மரங்களை கலெக்டர் எஸ்.ஜெயந்தி நேற்று நேரில் பார்வையிட்டார்.
தூர்வாரும் பணிகள்அப்போது அதிகாரிகளிடம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தொகை வழங்கப்பட்டது குறித்தும் கேட்டறிந்தார். முன்னதாக உடுமலை ஊராட்சி ஒன்றியம் வடபூதிநத்தம் பெரியகுளத்தில் வண்டல் மண் எடுக்கப்பட்டு தூர்வாரும் பணிகளையும் மற்றும் உடுமலை பழனிசாலை வெஞ்சமடை அருகில் அமைந்துள்ள குட்டை தூர் வாரி சீர்படுத்தப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னாராமசாமி, உடுமலை ஆர்.டி.ஓ.சாதனைக்குறள், உடுமலை தாசில்தார் தயானந்தன் மற்றும் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை தொடர்புடைய அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.