முழுநேர ராணுவ மந்திரி நியமன விவகாரம்: மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்
முழுநேர ராணுவ மந்திரியை நியமனம் செய்யாதது தொடர்பாக மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பை,
முழுநேர ராணுவ மந்திரியை நியமனம் செய்யாதது தொடர்பாக மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.
ராணுவ அதிகாரி பலிகாஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட பயங்கரவாத தாக்குதலில் இளம் ராணுவ அதிகாரி ஒருவர் பலியானார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து சிவசேனா கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில் நேற்று தலையங்கம் வெளியானது. அதில் கூறி இருப்பதாவது:–
ராணுவ அமைச்சகம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வசம் ஒப்படைக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரையில் முழுநேர ராணுவ மந்திரி நியமனம் செய்யப்படவில்லை. இந்தியாவை போன்ற பெரிய நாட்டில், முழுநேர ராணுவ மந்திரி நியமிக்கப்படாதது, தேசிய பாதுகாப்புடன் விளையாடுவதற்கு சமமானது.
ராணுவ வீரர்கள் தாங்குகிறார்கள்பாரதீய ஜனதா தலைமையிலான அரசு அமைய பொதுமக்கள் தான் காரணம். பொதுமக்கள் செய்த தவறுக்கான சுமையை ராணுவ வீரர்கள் தாங்குகிறார்கள். இன்றைக்கு நாட்டின் ராட்சகர்களாக சுற்றிக்கொண்டிருப்பவர்கள், விவசாயிகளின் குரலை கேட்க மறுக்கிறார்கள்.
கொடூரமாக கொல்லப்பட்ட ராணுவ வீரர்களது குடும்பத்தினரின் துயரத்துக்கும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. கடந்த ஓராண்டில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் பிரச்சினையை அரசே மேற்கொண்ட கொலை நோக்கத்துடன் கூடிய மரணம் விளைவித்தலாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.
ராணுவ மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்–மந்திரி பதவி ஏற்றதையடுத்து, ராணுவ அமைச்சகம் மத்திய மந்திரி அருண் ஜெட்லி வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.