பொறுப்புள்ள சுற்றுலாப் பயணியாக இருப்பது எப்படி?


பொறுப்புள்ள சுற்றுலாப் பயணியாக இருப்பது எப்படி?
x
தினத்தந்தி 13 May 2017 3:20 PM IST (Updated: 13 May 2017 3:20 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுலாக் காலம் இது. பலரும் சுற்றுலாவுக்காக பரபரப்பாகப் புறப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஒரு ‘பொறுப்பான’ சுற்றுலாப் பயணியாக இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றனர், வல்லுநர்கள்.

பொறுப்பான சுற்றுலாப் பயணியாக இருப்பது என்றால் என்ன? சுற்றுலா செல்லும் இடத்தில் சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்காமல் கவனத்தோடு நடந்துகொள்வது எப்படி?

எந்தெந்த விஷயங்களில் எல்லாம் நாம் கவனமாக இருக்கலாம்?
இதோ, தொடர்ந்து படியுங்கள்...

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது

ஆங்காங்கே தண்ணீர் பாட்டில்களை வாங்கி தண்ணீரைப் பருகிவிட்டு நினைத்த இடத்தில் தூக்கி எறிவதைவிட, மீண்டும் மீண்டும் நிரப்பி பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்களை வீட்டிலிருந்தே எடுத்துச் செல்லலாம். அதேபோல, பாலிதீன் கேரி பேக் போன்றவற்றுக்குப் பதிலாக, துணிப்பைகள், காகிதப் பைகளைப் பயன்படுத்தலாம். சுற்றுலாத் தலங் களில் அலட்சியமாக வீசி எறியப்படும் வாட்டர் பாட்டில்களும், பாலிதீன் பைகளும் அந்த இடத்தின் தன்மையையே பாதிக்கின்றன.

உள்ளூர் மக்களுக்கு ஆதரவு

சுற்றுலாத் தலங்களில் உள்ளூர் மக்களால் விற்பனை செய்யப்படும் இயற்கை சார்ந்த பொருட்களை விலை கொடுத்து வாங்குவதன் மூலம் அந்த மக்களை ஊக்குவிக்கலாம். உள்ளூர் கலா சாரத்தை வெளிப்படுத்தும் கைவினைப்பொருட்களைத் தாராளமாக வாங்கலாம். அதன்மூலம், அந்தந்தப் பகுதி மக்களின் கலா சாரம் நீடிக்க நம்மாலான உதவியைச் செய்ததாக அமையும். உள்ளூர் மக்கள், குறிப்பாக பெண்களுக்கு, அந்தக் கைவினைப் பொருட்கள் போன்றவற்றில் இருந்து கிடைக்கும் வருவாய்தான் வாழ்வாதாரம். எனவே, அவர்களுக்கு உங்களால் மறைமுக உதவி சேர்கிறதே?

சுத்தம், சுகாதாரம்

சுற்றுலாத் தலங்களில், நடமாடும் குப்பை உற்பத்தியாளர்களாக இல்லாமல், வெளியே செல்லும்போது கையோடு ஒரு பை கொண்டு சென்று கழிவுப்பொருட்களை அதில் போடலாம். பின்னர் அதை குப்பைத்தொட்டி தேடிப் போடலாம். முடிந்தால், கண்ணாடிப் பொருட்கள், காகிதம், பிளாஸ்டிக், பாலிதீன் என்று உலர் பொருட்கள், உணவுகள், பழங்கள் போன்ற ஈரமானவை எனத் தனித்தனியே பிரித்துப் போடலாம். நீங்கள் பயன்படுத்திய மருந்துப் பொருட்கள், பேண்டேஜ் துணிகள் போன்றவற்றை கண்ட இடங்களில் போடவே கூடாது. கண்ட இடங்களில் எச்சில் உமிழ்வது, சிறுநீர் கழிப்பதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

போக்குவரத்து

சுற்றுலாத் தலங்களில் வாடகைக் காரில் சுற்றி வருவதை விட, பொதுப் போக்குவரத்து அல்லது அங்கு கிடைக்கும் சைக்கிளை பயன்படுத்துவது நல்லது. நடை கூட நலமே. இதன் மூலம் நம்மால் கார்பன் வெளியீட்டைக் குறைக்க முடியும் என்பதுடன், சைக்கிள் அல்லது நடையின் மூலம் புதிய இடங்களையும் கண்டடைய முடியும். ஆனால் தாவரங்கள், விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் அதிகம் எல்லைமீறிச் செல்ல வேண்டாம். மலையேற்றம் மேற்கொண்டால்கூட, அதற்கென குறிப்பிடப்பட்டுள்ள வழியில் மட்டும் செல்லுங்கள்.

நெருப்பு மூட்டினால்...

குளிர்ச்சூழல் சுற்றுலாத் தலங்களில் ‘கேம்ப் பயர்’ எனப்படும் தீ மூட்டி, சுற்றி வட்டமாக அமர்ந்து குளிர்காய்ந்தபடி அரட்டையடிப்பது, பாடுவது எல்லாம் சுகம்தான். ஆனால் அங்கிருந்து கிளம்பும்போது, சிறு கங்கு கூட இல்லாமல் நெருப்பை முற்றிலும் அணைத்து விடுங்கள். ஒரு சிறு நெருப்பு, பெரும் வனப்பரப்பையே பஸ்பமாக்கிவிடக்கூடும்.

தவிர்க்கவேண்டிய பொருட்கள்

ஓர் இடத்துக்குச் சென்றதன் நினைவாக அங்கு சில பொருட்களை வாங்கிவர நினைப்பது இயல்புதான். ஆனால் விலங்குகளில் இருந்தும், அவற்றைத் துன்புறுத்தியும் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்காதீர்கள். அந்தப் பொருட் களுக்குப் பின்னால் உள்ள உயிர்களின் வலியை உணருங்கள்.

மின்விளக்குகள், தண்ணீர்க் குழாய்கள்...

தங்கியுள்ள இடத்தில் இருந்து வெளியே புறப்படும்போது மின்விசிறி, விளக்குகள் போன்ற மின்சாதனங்களை அணைத்திருக்கிறோமா, தண்ணீர்க் குழாய்களை மூடியிருக்கிறோமா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தங்குமிடம், சூரிய ஒளி சாதனங்கள் போன்ற பசுமை தொழில்நுட்பங் களைப் பயன்படுத்துவதாக இருந்தால் நல்லது.

அதேபோல, வழக்கமான ஓட்டல்கள் தாண்டி, ‘ஹோம்ஸ்டே’ எனப்படும், தங்கும் வசதியை அளிக்கும் வீடுகளில் தங்கினால் வாடகை, சாப்பாட்டுச் செலவு குறைவதுடன், புதிய அனுபவமாகவும் இருக்கும்.
என்ன, இனி நீங்களும் பொறுப்புள்ள சுற்றுலாப் பயணிதானே!


Next Story