வேலூர் சேண்பாக்கம் அருகே அரிசி மூட்டைகளுடன் சென்ற லாரி கவிழ்ந்தது 6 டன் அரிசி சாலையில் கொட்டியதால் பரபரப்பு
திமிரியில் இருந்து குடியாத்தத்திற்கு நேற்று அதிகாலை அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது.
வேலூர்,
திமிரியில் இருந்து குடியாத்தத்திற்கு நேற்று அதிகாலை அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. வேலூர் புதிய பஸ் நிலையத்தை கடந்து சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேண்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக தடுப்புகளை போலீசார் வைத்திருந்தனர். லாரி வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் தடுப்புகள் இருந்ததை பார்த்ததும் வேகத்தை குறைக்க டிரைவர் முயற்சித்தார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் திடீரென கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த சுமார் 6 டன் அரிசி சாலையில் கொட்டியது. இந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே சாலையில் கொட்டிய அரிசியை சேகரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த விபத்தால் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வேலூர் தாலுகா மற்றும் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சாலையில் கொட்டிய அரிசி மூட்டைகளில் சேகரிக்கப்பட்டு மற்றொரு லாரி மூலம் அனுப்பப்பட்டது.