ஏலகிரி மலையில் 27, 28–ந் தேதிகளில் கோடைவிழா அனைத்து துறையினரும் ஒத்துழைப்புடன் செயல்பட அமைச்சர் கே.சி.வீரமணி அறிவுறுத்தல்


ஏலகிரி மலையில் 27, 28–ந் தேதிகளில் கோடைவிழா அனைத்து துறையினரும் ஒத்துழைப்புடன் செயல்பட அமைச்சர் கே.சி.வீரமணி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 14 May 2017 4:30 AM IST (Updated: 13 May 2017 6:18 PM IST)
t-max-icont-min-icon

ஏலகிரி மலையில் வருகிற 27 மற்றும் 28–ந் தேதிகளில் கோடைவிழா நடக்கிறது.

ஜோலார்பேட்டை,

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோடைவாசஸ்தலமான ஏலகிரி மலையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கோடைவிழா குறித்த ஆலோசனை கூட்டம் ஏலகிரி மலையில் தனியார் விடுதியில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் பெரியசாமி முன்னிலை வகித்தார். வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், ‘‘ஏலகிரி மலையில் வருகிற 27 மற்றும் 28–ந் தேதிகளில் கோடைவிழா நடக்கிறது. இதில் அனைத்து துறையை சேர்ந்தவர்களும் இணைந்து விழா சிறப்பாக நடக்க ஒத்துழைக்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு துறையின் அரங்குகளும் சிறப்புடன் அமைக்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த துறையினர் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

முழு ஈடுபாடு

கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசுகையில், ‘‘ஏலகிரிமலையில் ஒவ்வொரு வருடமும் கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் கோடைவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சரியான நேரத்தில் கோடைவிழா நடப்பது மிகவும் பொருத்தமாகும். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான வசதிகள் முழு அளவில் செய்ய வேண்டும். இதில் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.’’ என்றார்.

முன்னதாக கலெக்டர் ராமன் மற்றும் அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் படகுத்துறை, பூங்கா, நேச்சுரல் பார்க்கில் செயற்கை நீரூற்று மற்றும் இசையுடன் கூடிய நீர்வீழ்ச்சி ஆகியவற்றை பார்வையிட்டனர்.

கூட்டத்தில் திருப்பத்தூர் சப்–கலெக்டர் நாராயணன் (பொறுப்பு), துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.கே.ஜி.ரமேஷ், ஜோலார்பேட்டை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், கூட்டுறவு துறை துணை பதிவாளர் பாஸ்கர், மேலாண்மை இயக்குனர் சத்தியநாராயணன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் தேவபார்த்தசாரதி, வட்டார மருத்துவ அலுவலர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். கோடைவிழாவில் 29 துறைகளை சேர்ந்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.


Next Story