நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 1,037 தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பேட்டி
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 1,037 தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நொச்சிமலை ஊராட்சி வாணியந்தாங்கல் பகுதியில் கிளிப்பட்டு செல்லும் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.92 ஆயிரம் மதிப்பில் இந்த பணிகள் நடக்கிறது. இதனை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது கட்டுமான பணிகள் மற்றும் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம், குடிநீர் பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் அவர் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுடன் இணைந்து தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டார். சுமார் 2 மணி நேரம் மண்வெட்டுதல், கற்களை அடுக்கி வைத்தல், மண்ணை ஏரி கால்வாய் கரையில் கொட்டுதல் போன்ற பணிகளை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே மேற்கொண்டார்.
950 பணிகள் நிறைவுஅதன்பின்னர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நிருபர்களிடம் கூறியதாவது:–
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அதற்கு முக்கிய காரணம் மாவட்டத்தில் நிலத்தடிநீர் குறைவாக காணப்படுவதாகும். குடிநீர் பிரச்சினை தீர்க்க நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் அவசியமாகும். அதற்கான பணியில் மாவட்ட நிர்வாகம் தற்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 1,037 தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 950 பணிகள் நிறைவடைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் புருஷோத்தமன், அமாவாசை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இனியன், ஊராட்சி செயலர் சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.