குடிநீர் தேவை உள்ள இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ. 7½ லட்சம் நிதி ஒதுக்கீடு தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன் தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் தேவை உள்ள இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தாதநாயக்கன்பட்டியில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசன், தாசில்தார் ராஜசேகரன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த 15 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு, பட்டா மாறுதல் ஆணை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்.
பயன்பெற வேண்டும்முகாமில் கலெக்டர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கும், ஆழ்துளை கிணறுகளை குடிநீர் தேவையுள்ள இடங்களில் அமைக்கவும், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதி மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் 600 தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்ட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இந்த பகுதியை சேர்ந்த மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனிநபர் கழிப்பறைகளை கட்ட முன்வரவேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் வழங்கப்படுகின்றன. எனவே பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று பேசினார்.
இந்த முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நிலவேம்பு கசாயம் மற்றும் உப்புக்கரைசல் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதனை கலெக்டர் விவேகானந்தன் பார்வையிட்டார்.