காணொலி காட்சி மூலம் அரசு முதன்மை செயலாளர்களுடன், சேலம் கலெக்டர் சம்பத் ஆய்வு தட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க அறிவுரை


காணொலி காட்சி மூலம் அரசு முதன்மை செயலாளர்களுடன், சேலம் கலெக்டர் சம்பத் ஆய்வு தட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க அறிவுரை
x
தினத்தந்தி 14 May 2017 5:00 AM IST (Updated: 13 May 2017 10:21 PM IST)
t-max-icont-min-icon

காணொலி காட்சி மூலம் அரசு முதன்மை செயலாளர்களுடன் சேலம் கலெக்டர் சம்பத் ஆய்வு நடத்தினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தங்குதடையில்லாத குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதன்மை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான டாக்டர் சந்திரமோகன், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சம்பத்துடன் காணொலி காட்சி மூலம் ஆய்வு நடத்தினர்.

குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்டம் செய்திட அரசு அனுமதி பெற்று இலவசமாக எடுத்து செல்ல உத்தரவிடப்பட்டதையும், இப்பணிகள் சேலம் மாவட்டத்தில் எந்த அளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் காணொலி காட்சி மூலமாக முதன்மை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர் சம்பத் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

லாரிகள் மூலம் குடிநீர்

அப்போது வண்டல் மண் கொண்டுள்ள நீர் நிலைகளின் விவரம், வண்டல் மண் எடுப்பதற்காக கண்டறியப்பட்டுள்ள நீர் தேக்கங்களின் விவரம், மதிப்பீடு செய்யப்பட்டுள்ள வண்டல் மண்ணின் அளவு, இதுவரை வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நீர் தேக்கங்களின் விவரம், இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள வண்டல் மண்ணின் அளவு, பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்து காணொலி காட்சி மூலமாக ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகளுக்கு கோடைகாலத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது. தண்ணீர் அதிகமாக கிடைக்கும் இடங்களிலிருந்து, தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு சென்று வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளதா? எனவும், இல்லையென்றால் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் முதன்மை செயலாளர்கள் சந்திரமோகன், பிரபாகர் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

இந்த காணொலி காட்சி ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மேட்டூர் உதவிகலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் ராம.துரைமுருகன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story