விடியவிடிய வழிநெடுக காட்சி தந்த கள்ளழகர் இன்று அழகர்மலைக்கு திரும்புகிறார்
மதுரையில் கடந்த 5 தினங்களாக பக்தர்களுக்கு காட்சியளித்த கள்ளழகர் இன்று காலை அழகர்மலைக்கு திரும்புகிறார்.
கள்ளந்திரி,
உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழா மதுரையில் நடைபெற்றது. இதற்காக கள்ளழகர் அழகர்மலையில் இருந்து கடந்த 8–ந்தேதி மதுரைக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வந்தார். மறுநாள் அவரை மூன்று மாவடியில் எதிர்சேவை செய்து பக்தர்கள் வரவேற்றனர். 10–ந் தேதி கள்ளழகர் வைகயாற்றில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து வண்டியூர் வீரராகப் பெருமாள் கோவிலில் தங்கிய கள்ளழகர், மறுநாள் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்தார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம், பூப்பல்லக்கு விழாக்கள் நடைபெற்றன. இதையடுத்து நேற்று மதியம் ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலுக்கு வந்த கள்ளழகர் அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு புதூர் வழியாக அழகர்மலைக்கு புறப்பட்டார்
வையாழிதொடர்ந்து வழி நெடுக உள்ள கடச்சனேந்தல், காதக்கிணறு சுந்தரராஜன்பட்டியில் எழுந்தருளிய கள்ளழகர் நள்ளிரவு மறவர் மண்டபத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு விடிய, விடிய வழிநெடுகிலும் அருள்பாலித்து வந்த கள்ளழகர், திருவிழான்பட்டி, அப்பன்திருப்பதியில் இன்று அதிகாலையிலும், கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டியில் காலையிலும் பக்தர்களுக்கு விடிய, விடிய கள்ளழகர் காட்சித் தருகிறார்.
இன்று காலை 10 மணிக்கு அழகர்மலையை அடைகிறார். அங்கு 18–ம்படி கருப்பணசாமி சன்னதியில் வையாழி நடைபெற்று, கள்ளழகருக்கு திருஷ்டி கழிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று, கோவிலுக்கு சென்றடைகிறார். அதைதொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) உற்சவ சாந்தியுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
சேவல் சண்டைமுன்னதாக நேற்று மலைக்கு திரும்பும் விழா அப்பன்திருப்பதி, கள்ளந்திரியில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி புராண வழக்கப்படி கள்ளந்திரி அருகே உள்ள மாத்தூர், வெள்ளியங்குன்றம் கிராமத்தில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சேவல் சண்டை நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அலங்காநல்லூர், பாலமேடு, மேலூர், திருப்பரங்குன்றம், நத்தம் உள்பட பல பகுதிகளில் இருந்து உயர் ரக ஜாதி சேவல்களுடன் ஏராளமானோர் வந்திருந்தனர்.