அழகப்பா பல்கலைக்கழகம் சிறந்து வளர்ச்சியை கண்டுள்ளது துணைவேந்தர் சுப்பையா தகவல்


அழகப்பா பல்கலைக்கழகம் சிறந்து வளர்ச்சியை கண்டுள்ளது துணைவேந்தர் சுப்பையா தகவல்
x
தினத்தந்தி 14 May 2017 4:30 AM IST (Updated: 13 May 2017 11:36 PM IST)
t-max-icont-min-icon

அழகப்பா பல்கலைக்கழகம் கடந்த 2 ஆண்டுகளில் சிறந்த வளர்ச்சியை கண்டுள்ளது என்று துணைவேந்தர் சுப்பையா தெரிவித்தார்.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 33–வது ஆண்டு தோற்றுவிப்பு நாள் விழா மற்றும் அலுவலர்கள் நாள் விழா நடைபெற்றது. விழாவில் துணை வேந்தர் சுப்பையா தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–

அழகப்பா பல்கலைக்கழகம் தேசிய தர நிர்ணய குழுவின் மதிப்பீட்டில் ‘ஏ பிளஸ்‘ கிரேடு தகுதியை அடைந்ததற்கு, பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த முன்னாள் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோரின் பங்களிப்பும் முக்கியமானது. கடந்த 2 ஆண்டுகளில் அழகப்பா பல்கலைக்கழகம் சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்களின் அர்ப்பணிப்பும், கடின உழைப்புமே ஆகும். பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றும் பண்பு சிறந்து விளங்குகிறது. பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த ‘ஏ பிளஸ்‘ கிரேடு தகுதிக்கு தகுதியானவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் ஒத்துரை நல்க வேண்டும்,

இவ்வாறு அவர் கூறினார்.

ஒருங்கிணைந்த செயல்பாடு

பின்னர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் தண்டபாணி கூறும்போது, 1985–ல் தொடங்கப்பட்ட அழகப்பா பல்கலைக்கழகம் அபரீதமான வளர்ச்சியை கண்டுள்ளது. ஆசிரியர்கள், அலுவலர்கள் என்ற பாகுபாடு இன்றி ஒருங்கிணைந்த செயல்பாடே காரணம் என்றார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி, மேலாண்மை புல முதன்மையர் மாணிக்கவாசகம், முன்னாள் தேர்வாணையர் நிலவழகன், முன்னாள் பதிவாளர் செண்பகவல்லி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பல்கலைக்கழக பதிவாளர் பாலச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். இதில் துணை பதிவாளர் பாலசுப்பிரமணியன், கண்காணிப்பாளர் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தேர்வாணையர் குருமல்லேஷ் நன்றி கூறினார்.


Next Story