குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விளைநிலங்களில் உரமாக பயன்படுத்த விண்ணப்பிக்கலாம்


குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விளைநிலங்களில் உரமாக பயன்படுத்த விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 14 May 2017 3:00 AM IST (Updated: 14 May 2017 12:08 AM IST)
t-max-icont-min-icon

குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விளைநிலங்களில் உரமாக பயன்படுத்த விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

நாகர்கோவில்

குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விளைநிலங்களில் உரமாக பயன்படுத்த விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

வண்டல் மண்

குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. அவற்றில் படிந்துள்ள வண்டல்மண்ணை எடுத்து தங்கள் விளைநிலங்களுக்கு உரமாக பயன்படுத்த விரும்பும் விவசாயிகள் கலெக்டரின் அனுமதி பெற்று, பொதுப்பணித்துறை குளமாக இருந்தால் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளரிடம் இருந்தோ அல்லது ஊராட்சி அமைப்புகள் கட்டுப்பாட்டில் உள்ள குளமாக இருந்தால் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளரிடம் இருந்தோ வண்டல் மண்ணை பெற்று பயன்படுத்தலாம்.

இதற்கு மண் தோண்டுதல் மற்றும் ஏற்றுக்கட்டணமாக கனமீட்டருக்கு ரூ.35.20 கேட்பு வரைவோலையாக சம்மந்தப்பட்ட துறையின் செயற்பொறியாளர் பெயருக்கு செலுத்த வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை, விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

முறையான அனுமதி

விண்ணப்பத்தில் வண்டல்மண் எடுக்கவிருக்கும் குளத்தின் பெயர், வருவாய் கிராமம், விவசாயிக்கு சொந்தமான நன்செய் அல்லது புன்செய் நிலத்தின் சர்வே எண், பரப்பு, பயிரிடப்படும் பயிர் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். நில உடைமைக்கான நிலவரி ரசீது நகல், கம்ப்யூட்டர் பட்டா நகல் அல்லது பயிர் சாகுபடி செய்வதற்கான கிராம நிர்வாக அலுவலர் சான்று இணைக்கப்பட வேண்டும்.

அதிகபட்சமாக ஒரு ஏக்கர் நன்செய் நிலத்துக்கு 75 கனமீட்டர் (25 டெம்போ) அளவுக்கும், ஒரு ஏக்கர் புன்செய் நிலத்துக்கு 90 கனமீட்டர் (30 டெம்போ) அளவுக்கும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.

எனவே விவசாயிகள் கலெக்டரின் முறையான அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்து தங்கள் விளை நிலங்களுக்கு பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story