ஊட்டி கண்காட்சியில் 31 ஆயிரம் ரோஜா மலர்களால் உருவான ‘செல்பி ஸ்பாட்’


ஊட்டி கண்காட்சியில் 31 ஆயிரம் ரோஜா மலர்களால் உருவான ‘செல்பி ஸ்பாட்’
x
தினத்தந்தி 14 May 2017 4:00 AM IST (Updated: 14 May 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் 15–வது ரோஜா மலர் கண்காட்சியை கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார். இதில் 31 ஆயிரம் ரோஜா மலர்களால் உருவான ‘செல்பி ஸ்பாட்‘ சுற்றுலா பயணிகளை வியக்க வைத்தது.

ஊட்டி,

ஆண்டுதோறும் மே மாதம் ஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விழா கடந்த 6–ந்தேதி நேருபூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதில் காய்கறிகளை கொண்டு பல்வேறு வித அலங்காரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.

இதனை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் 15–வது ரோஜா மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதை கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார். எம்.பி.க்கள் கே.ஆர்.அர்ஜூனன், கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் மணி, துணை இயக்குனர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரதநாட்டிய பாவைகள்

இந்த ரோஜா மலர் கண்காட்சியில் பிரதானமாக, 31 ஆயிரம் வித, விதமான ரோஜா மலர்களை கொண்டு 15 அடி நீளமும், 10 அடி உயரமும் கொண்ட‘செல்பி ஸ்பாட்‘ அலங்காரம் உருவாக்கப்பட்டு இருந்தது. இது தவிர டால்பின் மீன்கள் போன்று ரோஜா மலர்களால் உருவான அலங்காரமும் இடம்பெற்று இருந்தது. சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த இந்த ‘செல்பி ஸ்பாட்‘ முன்பு சுற்றுலா பயணிகள் நின்று ‘செல்பி‘ புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினர்.

இது தவிர கோவை, திருப்பூர், கன்னியாகுமாரி, ஈரோடு, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை துறை சார்பில், பரத நாட்டிய பாவையர் போன்ற வடிவங்கள், ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் வியந்தனர். அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மலர்களால் உருவான புறா, ராக்கெட்

இந்த ரோஜா மலர் கண்காட்சியில் சேலம் மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் மலர்களால் உருவாக்கப்பட்ட 12 அடி உயர ராக்கெட் அனைவரையும் கவர்வதாக இருந்தது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் ரோஜா மலர்களால் மாம்பழ அலங்காரம் வைக்கப்பட்டு இருந்தது. மதுரை மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் 2 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு அழகிய புறா அலங்காரம் அமைக்கப்பட்டு இருந்தது.

பரிசுகள்

இதுதவிர ரோஜா மலர் இதழ்களை கொண்டு குழந்தைகளை கவரும் மிக்கி மவுஸ் கார்ட்டூன் அலங்காரமும் இருந்தது. இதன் அருகில் நின்று குழந்தைகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த ரோஜா மலர் கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. மாலை பரிசளிப்பு விழா நடைபெறும்.

இந்த பரிசளிப்பு விழாவிற்கு கலெக்டர் சங்கர் தலைமை தாங்கி, சிறந்த அரங்குகள் மற்றும் தனியார் பூங்காக்களுக்கு சுழற்கோப்பைகள் உள்ளிட்ட பரிசுகளை வழங்குகிறார். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இங்கு பரதநாட்டியம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து வருகிற 19–ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.


Next Story