புளியங்குடி அருகே கழிவுநீர் தொட்டிக்கான குழியில் மூழ்கி சிறுவன் சாவு சக சிறுவர்களுடன் விளையாடிய போது தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்
புளியங்குடி அருகே சக சிறுவர்களுடன் விளையாடிய போது கழிவுநீர் தொட்டிக்கான குழியில் தவறி விழுந்த சிறுவன் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
புளியங்குடி,
நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ளது வெள்ளானை கோட்டை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி அங்காள ஈசுவரி. இவர்களுக்கு கவுதம், மதன்கவின் (வயது 6) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். அங்குள்ள பள்ளிக்கூடத்தில் கவுதம் 3–ம் வகுப்பும், மதன் கவின் 1–ம் வகுப்பும் படித்து வந்தனர்.
தற்போது பள்ளிக்கூடம் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மதன் கவின், கவுதம் மற்றும் கிராமத்தில் உள்ள சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து நேற்று முன்தினம் மாலையில் விளையாடினர்.
கழிவுநீர் தொட்டிஊருக்கு ஒதுக்குப்புறமாக புதிதாக வீடு ஒன்று கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த வீட்டின் அருகில் கழிவுநீர் தொட்டி (செப்டிக்டேங்க்) கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு பணிகள் பாதியில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்தது. மழைநீர் கழிவுநீர் தொட்டிக்கான குழியை மூழ்கடித்தபடி தேங்கி கிடந்தது.
சிறுவர்கள் அனைவரும் அந்த பகுதியில் தேங்கி கிடந்த தண்ணீரில் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் தேங்கி கிடந்த கழிவுநீர் தொட்டிக்கான குழிக்குள் சிறுவன் மதன் கவின் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். சிறிது நேரத்தில் தண்ணீரில் மதன் கவின் மூழ்கினான்.
மாயமான சிறுவன்இதனை கவனிக்காத மற்ற சிறுவர்கள் விளையாடி விட்டு இரவில் தங்களது வீடுகளுக்கு சென்றனர். கவுதமும் வீட்டுக்கு சென்றான். அப்போது மதன் கவின் குறித்து பெற்றோர் கேட்டனர். அதற்கு கவுதம் தம்பியை நான் பார்க்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முருகனும், அங்காள ஈசுவரியும் சிறுவன் மதன் கவினை தேடி அலைந்தனர். கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக புளியங்குடி போலீசில் புகார் செய்தனர். புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் மாயமான சிறுவன் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
உடல் மிதந்ததுஇதற்கிடையே நேற்று காலையில் கழிவுநீர் தொட்டிக்கான குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் சிறுவனின் உடல் மிதந்தது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. சிறுவனின் பெற்றோர் மற்றும் வெள்ளானை கோட்டை கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் உள்பட கிராம மக்கள் அனைவரும் கதறி அழுதனர்.
தகவல் அறிந்த புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கழிவுநீர் தொட்டிக்கான குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.