பாளையங்கோட்டையில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தல்
பாளையங்கோட்டையில் டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று 7 மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டலம் சார்பில் பாளையங்கோட்டை முன்னீர்பள்ளம் அருகில் உள்ள டாஸ்மாக் நெல்லை மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் பணியிழந்த 20 ஆயிரம் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கும் வகையில் தற்போது இயங்கி வரும் மதுக்கடைகளில் உடனடியாக பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட இயக்குனரின் உறுதிமொழியை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜா தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் புங்கலிங்கம், செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நெல்லை மாவட்ட அமைப்பாளர் பொர்ணான்டோ, அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சுவாமிநாதன், போக்குவரத்து பணியாளர் சங்க மாநில துணை தலைவர் கணேசன், அகில இந்திய அரசு பணியாளர் மகா சம்மேளன சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் டாஸ்மாக் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்புடாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் டாஸ்மாக் மது குடோன் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதையொட்டி மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுபதிராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தால் லாரிகளில் ஏற்றி வைக்கப்பட்ட மது பாட்டில்களை மதுக்கடைகளுக்கு கொண்டு செல்வதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.