தமிழகத்தில் இந்தியை திணிக்க நினைக்கும் மத்திய அரசின் பகல் கனவு பலிக்காது
தமிழகத்தில் இந்தியை திணிக்க நினைக்கும் மத்திய அரசின் பகல் கனவு பலிக்காது என்று ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் கூறினார்.
ஈரோடு,
இந்தி மொழியை கல்வி நிலையங்களில் கட்டாயமாக்கக்கூடாது. பாராளுமன்றத்தில் இந்தியில்தான் பேச வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட எல்லா மொழிகளுக்கும் சமஉரிமை வழங்கவேண்டும். அரசு பணியிடங்களில் அனைத்து மொழியினருக்கும் சம வாய்ப்பு வழங்கிட வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழி என்னும் நிலையை மாற்றக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் சிவில் உரிமைக்கழக மாநில தலைவர் கண.குறிஞ்சி தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தி மொழிஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்களில் இந்தி மொழியை திணித்துவிடலாம் என்று மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படுகிறது. விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்தி மொழியில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. பயணிகளின் டிக்கெட்டிலும் இந்தி மொழியில் அச்சிடப்படுகிறது.
பகல் கனவுகடந்த 1965–ம் ஆண்டு இதேநிலை ஏற்பட்டது. அப்போது இந்தி மொழிக்கு எதிராக தமிழ்நாட்டில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. தமிழ் மொழியை மீட்டெடுக்க இளைஞர்கள் பலர் தீக்குளித்து மரணம் அடைந்தனர். அதன்பின்னர் அப்போதைய பிரதமர் நேரு இந்தி மொழி கட்டாயமாக்கப்படாது என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அவருடைய வாக்குறுதி தற்போது மீறப்படுகிறது.
தமிழக அரசு நிலையாக இல்லாமல் பலவீனமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் இந்தி மொழியை எளிதாக திணித்து விடலாம் என்று மத்திய அரசு பகல் கனவு காண்கிறது. மத்திய அரசின் பகல் கனவு பலிக்காது.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைபிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் பாட்ஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர செயலாளர் அம்ஜத்கான், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சென்னிமலையில்...முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சென்னிமலையில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் முத்தரசன் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. கைத்தறி சங்கங்கள் வங்கிகளில் வட்டிக்கு கடன் பெற்று வங்கி கடனை கட்ட முடியாமல் நெருக்கடியில் உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களிடம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாவிட்டால் வருகிற 15–ந் தேதி அவர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி முழு ஆதரவு கொடுக்கும்’, என்றார். அப்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் எஸ்.சின்னசாமி, ஒன்றிய துணை செயலாளர் எம்.நாகப்பன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.