வருகிற ஆண்டில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் நெல்லையில், ஜவாஹிருல்லா பேட்டி


வருகிற ஆண்டில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் நெல்லையில், ஜவாஹிருல்லா பேட்டி
x
தினத்தந்தி 14 May 2017 1:31 AM IST (Updated: 14 May 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

வருகிற ஆண்டில் மருத்துவ கல்விக்கான ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்

நெல்லை,

இந்திய தேர்தல் ஆணையம் வருகிற தேர்தல்களிலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தப்போவதாகவும், கூடுதலாக ஒப்புகை சீட்டு எந்திரம் இணைக்கப்படும் என்றும் கூறி உள்ளது. ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தில்லு, முல்லு செய்ய முடியாது என்றும் கூறி உள்ளது.

ஆனால் ஓட்டுப்பதிவு எந்திரம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தலின்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரத்தில் பா.ஜனதா கட்சியின் தாமரை சின்னத்தில் ஓட்டுகள் பதிவானது. இதுபற்றி தேர்தல் ஆணையம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலை நாடுகளில் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையிலும் வாக்குப்பதிவு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. இதே நடைமுறையை இந்தியாவிலும் பயன்படுத்த வேண்டும்.

பிளஸ்–2 தேர்வு முடிவு

மாநில அரசே மணல் குவாரிகள் அமைத்து மணல் விற்பனை செய்வது சுற்றுச்சூழலை பாதிக்கும். வைகை, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் வரம்பை மீறி மணல் அள்ளப்பட்டதால் மோசமான நிலையில் உள்ளன. எனவே மணல் குவாரி அமைப்பதை கைவிட்டு, கட்டுமானத்துக்கு மணல் கிடைக்க அரசு மாற்று வழியை கையாள வேண்டும்.

பிளஸ்–2 தேர்வு முடிவில் புதிய முறையை கொண்டு வந்ததை வரவேற்கிறோம். அதே நேரத்தில் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு நீட் தேர்வால் மருத்துவ கல்வியில் இடம் கிடைக்காமல் போனால் அது தமிழக அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த புதிய நடைமுறையை கொண்டு வந்திருக்கிறார்கள் என்று கருதுகிறோம். அதாவது நீட் தேர்வுக்கு ஆதரவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா? என்பதை அரசு விளக்க வேண்டும்.

‘நீட்’ தேர்வு

தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தி படிக்க வேண்டும் என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத்தேர்வை முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா எதிர்த்தார். அவரது ஆட்சி என்று கூறி செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய சரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசை அனுசரித்து போக வேண்டிய சூழ்நிலையால் அவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

இதுதவிர நுழைவுத்தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டு அலுவலர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுத்தது போல் தமிழக அரசும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் நுழைவுத்தேர்வு மூலம் தரமான டாக்டர்கள் கிடைப்பார்கள் என்று மத்திய அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது. ஏற்கனவே உள்ள நடைமுறையினால் தமிழகத்தில் சிறந்த டாக்டர்கள் உருவாகி இருக்கிறார்கள். எனவே வருங்காலத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

பேட்டியின் போது மாநில செயலாளர் மைதீன் சேட்கான், மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் உஸ்மான்கான் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


Next Story