கல்விக் கட்டண நிர்ணயக் குழு கேட்ட விவரங்களை தனியார் பள்ளிகள் தாக்கல் செய்ய வேண்டும்


கல்விக் கட்டண நிர்ணயக் குழு கேட்ட விவரங்களை தனியார் பள்ளிகள் தாக்கல் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 14 May 2017 4:00 AM IST (Updated: 14 May 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

கட்டண குழு கேட்ட விவரங்களை தனியார் பள்ளிகள் தாக்கல் செய்ய வேண்டும் என முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் ஏழை, எளிய மாணவ–மாணவிகள், பெற்றோர் கடும் பாதிப்படுவதாகவும், எனவே கல்விக் கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2015–ம் அண்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கல்விக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக பள்ளிகளிடம் கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை, மாணவர்களுக்கான வசதிகள் தொடர்பாக முழு விவரங்களை தர வேண்டும் என இந்த குழு கேட்டுக் கொண்டது. ஆனால் சில பள்ளிகள் மட்டுமே விவரங்களை தெரிவித்தன. இதனால் பள்ளி கட்டணத்தை நிர்ணயம் செய்வது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில் நேற்று புதுவை காராமணிக்குப்பத்தில் உள்ள ஜீவானந்தம் அரசு பள்ளியில் தனியார் பள்ளி கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக பள்ளிகளின் உரிமையாளர்கள், தாளாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், செயலர் நரேந்திரகுமார், இயக்குனர் குமார், துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்தவுடன் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவையில் மொத்தம் 313 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 198 பள்ளிகள் மட்டுமே விவரங்களை தந்துள்ளன. மீதமுள்ள பள்ளிகள் தேவையான விவரங்களை தரவில்லை. இதனால் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க முடியாத நிலை உள்ளது. பெற்றோருக்கு சுமை இல்லாத வகையிலும், பள்ளி நிர்வாகங்களுக்கு பாதிப்பில்லாத வகையிலும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகிகள் விரைவில் விவரங்களை தாக்கல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story