பொள்ளாச்சி அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சூறையாடிய பெண்கள்
பொள்ளாச்சி அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சூறையாடிய பெண்கள் எதிர்ப்பை மீறி திறந்ததால் ஆத்திரம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே பொதுமக்களின் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 100 மதுபாட்டில்களை உடைத்து சூறையாடினார்கள்.
எதிர்ப்பை மீறி மதுக்கடை திறப்புதேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் 158 மதுக்கடைகள் மூடப்பட்டன. பொள்ளாச்சி அருகே செல்லப்பம்பாளையத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடையை, திப்பம்பட்டிக்கு இடமாற்றம் செய்ய டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக திப்பம்பட்டி பூங்கா நகரில் ஒரு தனியார் தோட்டத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதை அறிந்த திப்பம்பட்டி, நல்லாம்பள்ளி உள்பட அருகில் உள்ள கிராம மக்கள் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பகுதியில் மதுக்கடை அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி பொதுமக்கள் திரண்டு வந்து பொள்ளாச்சி சப்–கலெக்டரிடம் மனு கொடுத்தனர். சப்–கலெக்டரும், இது பற்றி நடவடிக்கை எடுப்பதாக கூறி இருந்தார்.
மதுக்கடை திறப்புஇந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி பூங்கா நகரில் உள்ள தனியார் தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியின் கீழ் உள்ள ஒரு சிறிய அறையில் நேற்று முன்தினம் மதுக்கடை திறக்கப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த மதுபிரியர்கள் அங்கு சென்று மது குடித்தனர். அதோடு மதுக்கடையை ஓட்டி உள்ள கோழிப்பண்ணை பார் ஆக மாற்றப்பட்டது. அங்கு அமர்ந்து மது குடித்தனர்.
இது பற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி நேற்று காலை 11.15 மணிக்கு திப்பம்பட்டி–உடுமலை சாலையில் பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் ஊர்வலமாக மதுக்கடையை நோக்கி சாலையில் நடந்து சென்றனர்.
கடையின் பூட்டை உடைத்தனர்இது பற்றி அறிந்ததும் கோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். போலீசார் பொதுமக்களை மதுக்கடைக்கு நுழைய விடாமல் இருப்பதற்காக தோட்டத்தின் நுழைவு வாயில் முன் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மதுக்கடையை 2 பூட்டுக்கள் போட்டு பூட்டினார்கள். அந்த வழியாக வந்த பொதுமக்களை மதுக்கடைக்கு உள்ளே விடாமல் தடுத்தனர்.
இந்த நிலையில் தோட்டத்தின் பின்புற வழியாக 20–க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 40 பேர் உள்ளே புகுந்தனர். மதுக்கடையை பார்த்ததும் ஆத்திரத்தில் பூட்டை உடைக்க முயன்றனர்.
அப்போது அங்கு வந்த மதுக்கடை ஊழியர், தோட்டத்துக்காரர் பொதுமக்களை பார்த்து, பூட்டை உடைக்க வேண்டாம் என்றனர். அப்போது பொதுமக்களுக்கும், டாஸ்மாக் ஊழியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பூட்டை உடைக்க முயன்றவர்களும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பிறகு கற்களை தூக்கி பூட்டில் போட்டனர். கம்பியை கொண்டும் உடைக்க முயன்றும் பூட்டை உடைக்க முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பிறகு கடையின் 2 பூட்டுக்களும் உடைக்கப்பட்டன. மேலும் மதுக்கடையின் ஜன்னலில் இருந்த கண்ணாடியையும் உடைத்தனர்.
100 மதுபாட்டில்கள் உடைப்புஅதன்பிறகு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மதுக்கடைக்குள் ஆவேசமாக நுழைந்தனர். அங்கு வைத்திருந்த மதுபாட்டில்களுடன் இருந்த அட்டை பெட்டிகளை தூக்கி கொண்டு வந்து வெளியே வீசினார்கள். 5 அட்டை பெட்டிகளை தூக்கி வீசினார்கள். இதில் பீர், குவார்ட்டர் பாட்டில்கள் உள்பட 100 மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டன. பொதுமக்கள் மதுக்கடைக்குள் புகுந்து சூறையாடியதை அறிந்த போலீசார் அங்கு ஓடி வந்தனர். மதுபாட்டில்களை உடைத்த பெண்களை அப்புறப்படுத்தினார்கள்.
இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மதுக்கடையை மூட நடவடிக்கை எடுத்தால் தான் கலைந்து செல்வோம் என்றனர். இதை தொடர்ந்து போலீசார் மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் மதுக்கடை ஊழியர்கள் பெண்கள் வீசிய அட்டைபெட்டிகளில் உடையாத மதுபாட்டில்களை எடுத்து பத்திரமாக மற்றொரு அட்டை பெட்டியில் வைத்தனர். அதை தொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டது. அந்த மதுக்கடை முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்த சம்பவம் திப்பம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திறந்தால் தீக்குளிப்பு போராட்டம்இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–
செல்லப்பம்பாளையத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடையை திப்பம்பட்டி பகுதியில் அமைக்க கூடாது என்று சப்–கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் மதுக்கடை அமைக்க மாட்டோம் என்றனர். ஆனால் திடீரென்று திப்பம்பட்டி பூங்கா நகரில் தோட்டத்திற்குள் மதுக்கடை திறக்கப்பட்டது. மேலும் அங்குள்ள கோழி பண்ணையை பார் ஆக பயன்படுத்தி வருகின்றனர். அருகில் உள்ள தோட்டங்களுக்குள் குடித்து விட்டு மதுபாட்டில்களை உடைத்து போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் தோட்டத்திற்குள் விவசாயிகளால் நடந்து செல்ல முடியவில்லை. இங்கு மதுக்கடை திறந்தால் பள்ளி மாணவர்கள் முதல் அனைவரும் சீரழிந்து விடுவார்கள். இதனால் ஆத்திரத்தில் மதுபாட்டில்களை உடைத்தோம். கடையை திறக்க முயன்றால் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.