மதுக்கடைக்கு எதிராக மது அரக்கன் உருவபொம்மையுடன் ஊர்வலமாக சென்ற பொதுமக்கள்
மதுக்கடைக்கு எதிராக மது அரக்கன் உருவபொம்மையுடன் பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் கடைக்கு சீல் வைத்தனர்.
பொன்னேரி
நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து பொன்னேரி தாலுகாவில் ஏராளமான மதுக்கடைகள் மூடப்பட்டன. பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் மதுக்கடை திறக்க கூடாது என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் அதன் பின்னர் தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. தகவலறிந்த பலர் கடை முன்பு திரண்டு கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அந்த மதுக்கடை மூடப்பட்டது. அதன் பின்னர் மதுபிரியர்கள் மதுக்கடையை திறக்க கோரியதையடுத்து மீண்டும் கடை திறக்கப்பட்டது.
பாடை கட்டி ஊர்வலம்இந்த நிலையில் நேற்று காலை தடப்பெரும்பாக்கம், சிங்கிலிமேடு, திருவேங்கிடாபுரம், உட்பட 10–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடி அங்கு இருந்து மது அரக்கன் உருவபொம்மையை பாடை கட்டி ஊர்வலமாக மதுக்கடை நோக்கி எடுத்து சென்றனர். மது ஒழிப்பு பதாகைககளை கையில் ஏந்தி மதுவுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி சென்றனர். கையில் விளக்குமாறு வைத்திருந்தனர். மதுக்கடை அருகே உள்ள சாலையில் பாடையை வைத்து கோஷம் எழுப்பினர்.
தகவல் அறிந்த திருவள்ளுர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், வெங்கடேசன் உட்பட 50–க்கும் மேற்பட்ட போலீசார், பொன்னேரி தாசில்தார் ஐவண்ணன், வருவாய் ஆய்வாளர் பாரதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டக்காரர்களின் முன்னிலையில் வருவாய்த்துறையினர் மதுக்கடையை பூட்டி சீல் வைத்தனர். பின்னர் பொதுமக்கள் மதுஅரக்கன் உருவ பொம்மையை அருகில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து சென்று பாடைக்கு தீ வைத்த்தனர்.