கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம் கற்பகம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி முப்பிடாதி அம்மாள் (வயது 36).
வண்டலூர்
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் கற்பகம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி முப்பிடாதி அம்மாள் (வயது 36). இவர்களுக்கு சக்திபாலா (10), கபிலன் (7) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் பாலகிருஷ்ணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர் தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த முப்பிடாதி அம்மாள் நேற்று காலை வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முப்பிடாதி அம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாலகிருஷ்ணனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளதால், தனது மகளை கொடுமைப்படுத்தியதாக முப்பிடாதி அம்மாளின் தாயார் வேலம்மாள் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.