முதல் அமைச்சர் வீட்டு வாசலில் தர்ணா நடத்துவேன், மதுவுக்கு எதிராக போராடும் மாணவன் பேச்சு
காஞ்சீபுரம் மாவட்டம் படூர் ஊராட்சியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் அந்த பகுதி மக்கள் மதுக்கடையை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் படூர் ஊராட்சியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் அந்த பகுதி மக்கள் மதுக்கடையை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதை தொடர்ந்து படூர் ஊராட்சியை சேர்ந்த 3–ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் தன்னந்தனியாக குடியை விடு, படிக்க விடு என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தி மதுக்கடைக்கு எதிரே அமர்ந்து படிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டான். பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டமும் நடத்தினர்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவை இருமுறை நேரில் சந்தித்து மதுக்கடையை மூடக்கோரி ஆகாஷ் மனு அளித்தான். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் மதுக்கடை மூடப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் ஆகாஷ் தனது போராட்டத்தை நிறுத்திக் கொண்டான்.
ஆனால் அந்த மதுக்கடை மூடப்படாததால் ஆகாஷ் தனது போராட்டத்தை நேற்று மீண்டும் தொடங்கி உள்ளான். சக மாணவ–மாணவிகள் 50 பேருடன் சேர்ந்து படிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டான். மதுக்கடை மூடப்படாவிட்டால் முதல்–அமைச்சர் வீட்டு வாசலில் அமர்ந்து படிக்கும் போராட்டம் நடத்துவேன் என்று மாணவன் ஆகாஷ் கூறினான்.