காரைக்குடியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


காரைக்குடியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 15 May 2017 4:30 AM IST (Updated: 14 May 2017 11:06 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் பல்வேறு இடங்களில் மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக வேறு இடத்தில் புதிய கடைகள் திறக்க முயற்சி நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இருக்கின்ற கடைகளையும் மூட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதேபோல் காரைக்குடி வ.உ.சி. சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை சாலையோரத்தில் உள்ளதால், இந்த கடையை அகற்ற வேண்டும் என்று அதன் அருகில் உள்ள மேட்டுக்கடை, முத்தரையர் தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் இந்த டாஸ்மாக் கடையால் இப்பகுதி பெண்கள், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முற்றுகை போராட்டம்

ஆனால் அந்த டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் முன்வரவில்லை. இதனைத்தொடர்ந்து நேற்று மேட்டுக்கடை, முத்தரையர் தெரு பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழர் தேசிய முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் மாறன் தலைமையிலான கட்சியினர் நேற்று அந்த டாஸ்மாக் கடையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அந்த கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த கடையை நிரந்தரமாக மூடக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளவேனில், முத்துக்கிருஷ்ணன் மற்றும் வருவாய் ஆய்வாளர் பாண்டுரங்கன் ஆகியோர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து டாஸ்மாக் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story